வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் உலோக பொருட்கள் கிடைத்த நிலையில் மணல் குவியலை அகற்றியபோது மேலும் 4 சாமி சிலை கண்டெடுப்பு-வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பு

வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த ஆலங்குடி பகுதியில் வீடு கட்டுவதற்கு பள்ளம் தோண்டியபோது சாமி சிலைகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட உலோக பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் அதே பகுதியில் மேலும் நான்கு சாமி சிலைகள் கிடைத்தது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த பூந்தோட்டம் ஊராட்சி சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(55). இவர் ஆலங்குடி சந்தை வெளி பகுதியில் வீடு கட்டுவதற்காக இடம் வாங்கியுள்ளார். அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக கடந்த மே 18ம் தேதி மாலை ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது சாமி சிலைகள் உள்பட 30க்கும் மேற்பட்ட உலோக பொருட்கள் சிறிய அளவில் இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட பொருட்களை திருவாரூர் தொல்லியல் துறை காப்பாட்சியர் மருதுபாண்டியன் ஆய்வு செய்தார். அவை அனைத்தும் 13ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும், இவைகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி இருக்கும் எனவும் தெரிய வந்தது. தோண்டப்பட்ட மண் அப்பகுதியில் குவியலாக வைக்கப்பட்டிருந்தது. அந்த மண் குவியலை நேற்று அப்புறப்படுத்தியபோது சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள பெருமாள் சிலை மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட பூமாதேவி உள்ளிட்ட இரண்டு பெண் தெய்வங்கள் சிலை 15 சென்டி மீட்டர் உயரம் கொண்ட ஒரு சிறிய விஷ்ணு சிலை உள்ளிட்ட நான்கு சிலைகள் கிடைக்கப்பெற்றது.

மேலும் விஷ்ணு சக்கரம் உள்ளிட்ட மூன்று பொருட்கள், சந்தனகல் ஆகியவை சிதிலமடைந்த நிலையில் கிடைக்கப்பெற்றது. இது தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியர் சந்தான கோபால கிருஷ்ணன் மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்த் ஆகியோர் சிலைகளை கைப்பற்றி வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து வைத்தனர்.இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்து சிலைகள் மேலும் உள்ளனவா என்பதை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: