பன்னோக்கு அரசு மருத்துவமனை முன்பு பணி நிரந்தரம் செய்யக்கோரி தடையை மீறி சாலை மறியல்: 450 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை: மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் உள்ள செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி பன்னோக்கு மருத்துவமனை முன்பு தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 450 செவிலியர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்று தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் மற்றும் கொரோனா காலம் முடிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி சென்னை பன்னோக்கு மருத்துவமனை முன்பு நேற்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவல்லிக்கேணி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் தடை செய்யப்பட்ட பகுதியில் போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் எங்களை பணி நிரந்தரம் செய்யும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி, யாரும் எதிர்பார்க்காத நிலையில் மருத்துவமனை முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 450 செவிலியர்களை அதிரடியாக கைது செய்தனர். பிறகு அனைவரையும் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.

இதற்கிடையே போலீசாரின் தடை உத்தரவை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 450 செவிலியர்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி மருத்துவ ஒப்பந்த செவிலியர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்தனர். இதையடுத்து, கோயம்பேடு போலீசார், பேருந்து மூலமாக, கோயம்பேடு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கண்காணித்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், வேலூர், சேலம், மதுரை, திருச்சி ஆகிய  மாவட்டங்களில் இருந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக  தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஜாம்பஜார் போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் ராஜிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Related Stories: