போலீஸ் ரோந்து வாகனத்தில் ட்ராக்கிங் மொபைல் போன் திருட்டு: வழிப்பறி ஆசாமி கைது

தண்டையார்பேட்டை: போலீசார் விசாரணைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது ரோந்து வாகனத்தில் வைத்திருந்த ட்ராக்கிங் மொபைல் போனை திருடிய வழிப்பறி ஆசாமி கைது செய்யப்பட்டார். புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி 2வது தெருவில் குடும்ப பிரச்னை காரணமாக சண்டை ஏற்படுவதாக நேற்று அதிகாலை புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ நரசிம்மன், ரோந்து வாகன டிரைவர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை  நடத்தினர்.  பின்னர்,  ரோந்து வாகனத்தில் காவல் நிலையம் வந்தனர். அப்போது, வாகனத்தில் வைத்திருந்த ட்ராக்கிங் மொபைல் போன் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் எஸ்ஐ நரசிம்மன் புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் வானமாமலை வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் ட்ராக்கிங் மொபைல் போன் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேஷ் தெருவை சேர்ந்த ஆகாஷ் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ட்ராக்கிங் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது புதுவண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர்  காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்ட ஆகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: