போளூர் அடுத்த 99 புதுப்பாளையம் கல்குவாரியில் தொல்லியல் துறையினர் திடீர் ஆய்வு

போளூர் : போளூர் அடுத்த 99 புதுப்பாளையம் மலைக்குன்றில் விதி மீறி செயல்பட்ட  கல்குவாரி மற்றும் அதையொட்டி உள்ள மலைப்பகுதிகளில் திருவண்ணாமலை தொல்லியல் துறை அலுவலர் திடீர் ஆய்வு செய்தார்.போளூர் தாலுகா, 99 புதுப்பாளையம் கிராம எல்லையில் மலைக்குன்று உள்ளது. இங்கு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கான ஒப்பந்தம் முடிந்த பிறகும், தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடிய நிலையில், விதிமீறிய அந்த குவாரி செயல்பட  6 வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதற்குள், மாவட்ட கலெக்டர் அந்த குவாரியை ஆய்வு செய்து, அறிக்கையை  தாக்கல் செய்ய வேண்டும்  என கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை தொல்லியல் துறை அலுவலர் ரஞ்சித், போளூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோருடன் நேற்று புதுப்பாளையம் மலைப்பகுதி மற்றும் கல்குவாரி பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார்.அப்போது, கல்குவாரிக்கு அருகில் உள்ள பழங்கால சமண கற்படுக்கை, கல்குகைகள், இந்து கோயில் இருந்ததற்கான அடையாளங்கள், மயில்கள் நடமாட்டம் ஆகியன குறித்து ஆய்வு செய்து புகைப்படம் எடுத்து சென்றனர். தொடர்ந்து, இதுகுறித்து நீதிமன்றத்தில் முதல் கட்ட அறிக்கை சமர்பிக்கப்படும் என தெரிகிறது.

Related Stories: