கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுரை பயணம்

மதுரை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 8) சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வருகிறார். கலைஞர் நூலக கட்டுமான பணியை இன்று மாலை ஆய்வு செய்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு இன்று மாலை 5.20 மணியளவில் வருகிறார். அங்கு அமைச்சர்கள், கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை நத்தம் சாலை செல்கிறார்.

அங்கு ரூ.114 கோடியில் கட்டப்பட்டு வரும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்கிறார். மேலும் நூலக கட்டுமான பணிகள் குறித்து, பொறியாளர் சத்தியமூர்த்தியிடம் ஆலோசனை நடத்துகிறார். இரவு மேலூர் அருகே தும்பைப்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார்.

நாளை காலை 9 மணிக்கு சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் காலை 10 மணியளவில் திருப்புத்தூர் அருகே காரையூரில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு துறைகள் மூலம் 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு விட்டு, இரவு திருச்சி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Related Stories: