×

முலான்

நன்றி குங்குமம் தோழி

ஸ்நோ ஒயிட், பியூட்டி அண்ட் தி பியஸ்ட், பிரேவ், சிண்ட்ரெல்லா, டேங்கிள்ட், ஃபிரோஸன் வரிசையில் அடுத்த டிஸ்னி நாயகி திரைப்படம் ‘முலான்’. அனிமேஷனில் வந்த சீன போர் வீராங்கனையின் கதை, இப்போது திரைப்படமாக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. நிக்கி காரோ இயக்கத்தில் லியூ இஃபியி, ஜெட் லீ, டோன்னி யென், கோங் லீ உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

சிறு வயதிலேயே துறுதுறுவென, மேலும் போர் வீரர்களுக்கே உரிய திறமைகளுடன், குறும்புக்காரப் பெண்ணாக இருக்கிறாள் முலான். முலானின் அப்பா முன்னாள் அரசாங்க போர் வீரராக இருந்து விபத்தில் கால் இழந்தக் காரணத்தால் ஓய்வில் இருப்பவர். சிறுவயதிலேயே அவளது அப்பா, அம்மா சுற்றத்தார் என நீ ஒரு பெண் உனக்குள் இருக்கும் திறமைகளை நீ அடக்கிக் கொள்ள வேண்டும்... இல்லையேல் திருமணத்திற்கு வரன் கிடைக்காது என சொல்லி அவளின் போர் குணங்களையும், சக்தியையும் ஒடுக்குகிறார்கள்.

அனைத்தையும் கட்டுப்படுத்தி வளரும் முலான் வளர்ந்து திருமண வயதை எட்டுகிறாள், அவளுக்கான வரனும் வருகிறது. அதற்கான சம்பிரதாயம் மற்றும் அடக்கம் , ஒடுக்கம் எனச் சொல்லிக் கொடுக்க அந்த ஊரில் இருக்கும் ஒரு பெரிய மனுஷியிடம் பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்படுகிறாள் முலான். அங்கே எதிர்பார்த்தபடி தன் திறமையால் அப்பெண்ணின் கோபத்துக்கு ஆளாகி , உன் பெண்ணுக்கு இனி  திருமணம் நடப்பதே சிரமம் என திரும்ப அனுப்பப்படுகிறாள் முலான்.

இதற்கிடையில் நாடு எதிரிகளாலும் ஆபத்தான சூன்யக்காரியிடமும் மாட்டிக்கொள்கிறது. போரில் பல வீரர்கள் உயிரிழந்த நிலையில் படைக்கு வீரர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் என அரசரிடமிருந்து வீட்டிற்கு ஒரு ஆண் மகன் போருக்கு வர வேண்டும் என அழைப்பு வருகிறது. முலான் வீட்டில் இருவருமே மகள்கள் என்பதால் அவளின் தந்தையே மீண்டும் போருக்குக் கிளம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். ஆனால் இரவோடு இரவாக அப்பாவின் வாள், அவரின் கவச உடைகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு தன்னை ஒரு ஆணாகவே அலங்கரித்துக் கொண்டு கிளம்பிவிடுகிறாள் முலான். பல மைல்கள், மலைகள் எனக் கடந்து வரும் முலானுக்கு உண்மையான சவால்கள் அங்கேதான் காத்திருக்கின்றன.

ஆண்கள் தங்கியிருக்கும் கூடாரத்திலேதான் தங்க வேண்டும், ஒன்றாகக் குளிக்க வேண்டும், ஒரே படுக்கையறைகள் என அத்தனையையும் முலான் சமாளித்து போர் பயிற்சிகளை மேற்கொள்ளும் முலானால், சவால்களை எதிர்கொள்ள முடிந்ததா எதிரிகளையும், சூன்யக்காரியையும்  தன் திறமையால் வெற்றிக் கொண்டாளா இல்லையா என்பது மீதிக் கதை.

வாள் வீச்சு, சண்டைக் காட்சிகள் என முலானாக வரும் லியூ இஃபியி ஒவ்வொரு காட்சியிலும் அடடே சொல்ல வைக்கிறாள். டிஸ்னி இளவரசிகளிலேயே தனித்துவமானவள் முலான். மற்றவர்கள் அனைவருமே திருமணம், இளவரசனுக்கான காத்திருப்பு, பறவைகள், விலங்குகள், மந்திரம், காட்டில் பாடல்கள் பாடித் திரிவது என இருப்பார்கள். ஆனால் முலான் முற்றிலும் மாறுபட்டவள்.

பெண்களின் அப்போது முதல் இப்போது வரையிருக்கும் இயலாமையையும் கட்டுப்பாடுகளையும் மிக அழகாக போகிற போக்கில் உடைத்தெரிபவள். பெண் என்றாலே கல்யாணச் சந்தைக்குரிய பொருளாக பார்க்கும் நிலை இன்றுவரை மாறியபாடில்லை. அக்காலத்தில் எப்படியிருக்கும்... அதையும் மிக அற்புதமாக அரசியல் வார்த்தைகளாக்கி அரசவை படையையே அலங்கரிக்கிறாள். வாள்வீச்சு, பறந்து , சுழன்று சண்டையிடுதல் என சில காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

பெண்கள் பலதுறையில் முன்னேறியிருந்தாலும் இன்னமும் சில கட்டுப்பாடுகளுடன்தான் இருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லிச் சென்ற வகையில் முலான் நிச்சயம் பெண்களின் மனதையும், குடும்பங்களின் மனங்களையும் கவர்ந்து விடுகிறாள்.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

Tags : Mulan ,
× RELATED முலான்