புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ பாடத்திட்டம் அறிமுகம்: 10 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்; ஐஐடி இயக்குநர் தகவல்

சென்னை:  ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ என்ற புதிய பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்த உள்ளது என்று இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். ஐஐடி மெட்ராஸ் ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் மூலம் கட்டணமின்றி ஆன்லைனில் இந்தப் பாடத்திட்டம் கற்பிக்கப்படுவதுடன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கிரேடு சான்றிதழும் வழங்கப்படும்.  இதற்கு குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள மையங்களில் இறுதித் தேர்வு நடத்தப்படும். இந்தப் பாடத்திட்டம் மாணவர்கள், பயிற்றுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் அணுகக் கூடியதாக இருக்கும். முதலாவது பேட்ச் வருகிற ஜூலை மாதம் 1ம் தேதி  தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு வருகிற 24 ம் தேதியுடன் நிறைவடையும். ஆர்வமுள்ளவர்கள் https://www.pravartak.org.in/out-of-box-thinking.html  என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இது குறித்து ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதாவது: இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ள இப்பாடத் திட்டம் வரவிருக்கும் நாட்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்த பாடத்திட்டத்தின் பலன்களைக் காண முடியும். கட்டணம் ஏதுமின்றி பாடத்திட்டத்தை கிடைக்கச் செய்திருக்கிறோம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் குறிப்பாக இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெருமளவில் பயன்கிடைக்கச் செய்யும்.

‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ சிந்தனை என்பது மறைமுகமான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை வாயிலாகப் பிரச்னைகளைத் தீர்ப்பதாகும். தெளிவான காரணங்கள் உடனடியாகத் தெரியாத நிலையில், பாரம்பரிய முறைப்படி தர்க்கரீதியாக அடுத்தடுத்த படிகளில் கிடைக்காத யோசனைகள் இந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன. கணிதத்தின் கண்டறியப்பட்ட மற்றும் அறியப்படாத உண்மைகளை தர்க்கரீதியாகவும், விரிவாகவும் ஆர்வத்துடன் கண்டுபிடிப்பதன் மூலம் அத்தகைய சிந்தனை வலியுறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கணித சிக்கல்களைத் தீர்க்கும் திறன் உண்டு என்ற நினைப்பைப் போக்கும் வகையில், இந்த பாடத்திட்டம் பல்வேறு விதமான அணுகுமுறைகளை முன்வைக்கிறது.

Related Stories: