தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் குன்னூரில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு கருவிகள்-கலெக்டர் ஆய்வு

ஊட்டி :  தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் குன்னூர் ஆர்டிஒ., அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்பு கருவிகள், இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அதன்பின்னர் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்கின்றன. இந்த இரு பருவமழைகளின் போது மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிப்பு, குடியிருப்புகளின் மீது மரங்கள் விழுதல் போன்ற பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

மாவட்டம் முழுவதும் 283 இடங்கள் பேரிடர் ஏற்பட கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகள் கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பருவமழை சமயங்களில் ஏற்பட கூடிய இயற்கை இடர்பாடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கேரளாவை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்திலும் துவங்கியுள்ளது. குறிப்பாக ேகரளாவை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிவு இருந்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  பேரிடர் சமயங்களில் பயன்படுத்தப்படும் இயந்திர வாள், ஜெனரேட்டர் போன்ற அனைத்து மீட்பு உபகரணங்கள், பாதுகாப்பு கருவிகள் முறையாக செயல்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக குன்னூர் ஆர்டிஒ., அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பேரிடர் மீட்பு கருவிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், தென்மேற்கு பருவகாலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்கும் பொருட்டு பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது, என்றார். இந்த ஆய்வின் போது குன்னூர் ஆர்டிஒ., (பொறுப்பு) துரைசாமி, குன்னூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: