மானாமதுரை அருகே விவசாய நிலங்களில் குழிதோண்டி ஆய்வு: மீத்தேன் திட்டமா என விவசாயிகள் அச்சம்

மானாமதுரை, ஜூன் 6: மானாமதுரை அருகே விவசாய நிலங்களில் குழிதோண்டி ஆய்வு நடத்தப்பட்டதால், மீத்தேன் எடுக்க திட்டமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புளிச்சிக்குளம், கள்ளர் வலசை, செய்களத்தூர் ஆகிய கிராமங்களில் நஞ்சை நிலங்கள் உள்ளன. இங்கு கடந்த 2ம் தேதி ஒன்றிய அரசுக்கு சொந்தமான வாகனத்தில் வந்த நபர்கள் சுமார் 4 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அங்கிருந்த மண்ணை ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் அனைவருமே இந்தியில் பேசி உள்ளனர். விவசாயிகள் அவர்களிடம் கேள்வி எழுப்பியதற்கு எந்தவிதமான பதிலும் தரவில்லை. இதனால் அச்சமடைந்த கிராமத்தினர் இதுகுறித்து நேற்று வருவாய் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.விவசாயிகள் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் ராமமுருகன் கூறுகையில், ‘‘நஞ்சை நிலங்களில் நான்கு அடி ஆழத்திற்கு குழி தோண்டி மண்ணை ஆய்வு செய்துள்ளனர். இதற்காக நில உரிமையாளர்களிடம் முறையான அனுமதி ெபறவில்லை. எரிவாயு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என ஏதாவது விவசாயத்தை அழிக்கும் திட்டங்களை செயல்படுத்த இருக்கிறார்களோ என விவசாயிகள் அச்சம் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசும், சிவகங்கை மாவட்ட நிர்வாகமும் யார், எதற்காக மண்ணை ஆய்வு செய்தனர் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: