பொன்னமராவதி பகுதியில் 3 இடங்களில் மீன்பிடி திருவிழா

பொன்னமராவதி : பொன்னமராவதி பகுதியில் மூன்று இடங்களில் மீன்பிடித்திருவிழா நடந்தது. பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய் பாசனம் மூலம் விவசாயம் நடைபெறும். இந்த பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாயம் செழிக்கவும் மழை பெய்ய வேண்டியும் பாசனக் கண்மாய்களில் மீன்பிடி திருவிழாக்கள் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில் பொன்னமராவதி அருகே கேசராப்பட்டி கொன்னத்தான் கண்மாய், தூத்தூர் மனக்கண்மாய் தூத்தூர் சிரண்டான் கண்மாய் ஆகிய மூன்று இடங்களில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் ஜாதி,மதம் பாராமல் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகாலையிலேயே கண்மாயில் குவிந்து பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி மீன்களோடு மீன்களாக துள்ளிக் குதித்து போட்டி போட்டுக்கொண்டு ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன் பிடிக்கத் தொடங்கினர். ஒவ்வொருவர் கைகளிலும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

Related Stories: