பதிவுத்துறை அலுவலக சொந்த கட்டிடங்களில் பராமரிப்பு பணி: 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப ஐஜி சிவன் அருள் அறிவுரை

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகள் பெரும்பாலும் சொந்த கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடங்களில் ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணி மேற்கொள்வது என்பது அவசியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் பதிவுத்துறை அலுவலகங்களில் நடப்பு நிதியாண்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, திட்ட அறிக்கை தயார் செய்து 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பதிவுத்துறையில் அரசு கட்டிடங்களில் இயங்கும் அலுவலகங்களுக்கு மராமத்து மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 2022-23ம் நிதியாண்டினை பொறுத்து சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர்களை நேரில் அணுகி மதிப்பீட்டறிக்கையினை பெற்று பதிவுத்துறை தலைவருக்கு உடன் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த மதிப்பீட்டறிக்கைகளை மாவட்ட பதிவாளர்கள் தனிக்கவனம் செலுத்தி பணிகளின் அவசியம் குறித்து நன்கு பரிசீலித்து உரிய பரிந்துரை உடன் 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொதுப்பணித்துறையிடம் பெறப்பட்ட பணிகளுக்கான மதிப்பீட்டறிக்கைகளுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்குள் நிதி ஒப்பளிப்பு ஏதும் செய்யப்படவில்லை என்ற சான்று சேர்க்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும் எனக் கேட்டுக்ெகாள்ளப்படுகிறது. மாவட்ட பதிவாளர்கள் தங்களது பதிவு மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் பணிகள் குறித்த விவரங்கள், பணி முடிக்கப்பட்ட நாள் குறித்த விவரங்கள் ஆகியவற்றினை தனிப்பதிவேடுகள் துவங்கி குறிப்புகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: