குன்னூரில், தன்னார்வலர்கள் மூலம் ரூ.60 லட்சத்தில் மக்கும் குப்பை பதப்படுத்தும் மையம் திறப்பு

குன்னூர்: குன்னூரில், மக்கும் குப்பைகளை நவீன முறையில் இயற்கை உரமாக மாற்றும் மக்கும் குப்பைகள் பதப்படுத்தும் மையம் திறப்பு விழா நடைபெற்றது.குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஓட்டுப்பட்டறை குப்பைக் கூள மேலாண்மை பூங்காவில் ‘கிளீன் குன்னூர்’ அமைப்பு தரம் பிரித்து, மறுசுழற்சிக்கு பயன்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இங்கு அமைக்கப்பட்டுள்ள, மக்கும் குப்பை பதப்படுத்தும் மையம் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது‌. அதன்  துவக்க விழா  நடைபெற்றது. இதனை துவக்கி வைத்த வனம் மற்றும் சுற்றுச்சூழல் முதன்மை செயலர் சுப்ரியா சாகு பேசியதாவது: குன்னூரில் பெறப்படும் அனைத்து கழிவுகளும், சிறந்த முறையில் நவீன தொழில்நுட்பங்களுடன், மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுகிறது.

குறிப்பாக, மக்கும் கழிவுகளில் தயாரிக்கும், கார்பன் அதிகம் கொண்ட இயற்கை உரம் மண்ணுக்கு ஊட்டச்சத்து கிடைக்க காரணமாக உள்ளது. அழிந்த வனம் சார்ந்த இடங்களில் இந்த இயற்கை உரத்தை பயன்படுத்தினால் மீண்டும் புத்துயிர் பெறும். மாநிலத்தில் அனைத்து இடங்களிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில், ரூ.64 கோடி மதிப்பில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கழிவுகள் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு சுப்ரியா சாகு பேசினார்.

தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய சுப்ரியா சாகு அவர்களை வெகுவாக பாராட்டினார்.நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், எஸ்ஏடிபி திட்ட இயக்குநர் மோனிகா ரானா, நகராட்சி துணை தலைவர் வாசிம் ராஜா, ‘மைக்ரோ’ அறக்கட்டளை அறங்காவலர் கல்பனா கார், ‘கிளீன் குன்னூர்’ அமைப்பின் சமந்தா அயனா, டாக்டர் வசந்தன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: