வேளாண் விளைபொருட்கள் விற்பனை சட்டத்தின்படி 1% கட்டணமே காலம் காலமாக வசூலிக்கப்படுகிறது: ஓபிஎஸ்சுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுப்பு

சென்னை:  வேளாண் விளைபொருட்கள் விற்பனை சட்டத்தின்படி வர்த்தகத்திற்கு 1% கட்டணமே காலம்காலமாக வசூலிக்கப்படுகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை சட்டத்தின்படி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடைபெறும் வர்த்தகத்திற்கும், ஒரு சதவீத சந்தை கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை ஆண்டாண்டு காலமாக 1936ம் ஆண்டிலிருந்தே வசூலிக்கப்பட்டு வருகிறது. இது ஒன்றும் புதிதான நடைமுறை அல்ல என்பதை முன்னாள் முதல்வர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பதற்கு எவ்விதமான கட்டணமும் விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படுவதில்லை.

தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை சட்டத்தின்படி அதிகபட்சமாக 2 சதவீதம் சந்தைக் கட்டணம் வசூலிக்க வழிவகை இருந்தும், வியாபாரிகளின் நலன் கருதி ஒரே ஒரு சதவீதம் மட்டுமே அதிமுக காலத்திலும், திமுக காலத்திலும், வியாபாரிகளிடமிருந்து சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுவருகிறது. அதிமுக அரசு 2018ம் ஆண்டிலேயே அனைத்து வணிகர்களுக்கும் ஒற்றை உரிமம் என்ற நடைமுறையை அமல்படுத்தி, ஏறக்குறைய 3200க்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு ஒற்றை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதிமுக அரசு செயல்படுத்திய ஒற்றை உரிமத்தின் பலன் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஒரே சீரான அறிவிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கு கூடுதல் செஸ் விதிக்கப்படுவதாக தவறான புரிதலின் அடிப்படையில் அறிக்கை ஒன்றினை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த சரியான விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். அரசால் வெளியிடப்பட்டுள்ள தற்போதைய அறிக்கையானது நம் விவசாயிகளுக்கு தமிழகம் முழுமையும் நியாயமான நல்ல விலை அவர்களுடைய விலைபொருட்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டதாகும். வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்க அதற்கென தனி நிதிநிலை அறிக்கை தயாரித்து சமர்ப்பித்து வரும் திமுக அரசு நம் மாநில விவசாயிகளை காப்பதையும் அவர்கள் வாழ்வு வளம் பெறவும் மட்டுமே திட்டங்களை நிறைவேற்றி வருவதை மக்கள் அறிவார்கள். எனவே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் கடந்த 29ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரான கருத்து என்பதுடன் உண்மைக்குப்புறம்பான கூற்று. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: