சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள 34 நிறுவனங்களுக்கு விற்பனைப்பத்திரங்கள், தொழிற்மனை ஒப்படைப்பு ஆணைகளை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் இன்று (31.05.2022) சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு சிட்கோ தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள 34 நிறுவனங்களுக்கு விற்பனைப்பத்திரங்கள் மற்றும் தொழிற்மனை ஒப்படைப்பு ஆணைகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார். ஆய்வின் போது பேசிய அமைச்சர், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 10 வருடங்களாக சிட்கோ தொழிற்பேட்டைகளில் எவ்வித அடிப்படை பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாததால், குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தன.

கடந்த டிசம்பர்-2021 மாதம் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ரூ. 10 கோடி செலவில் 57 தொழிற்பேட்டைகளில் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்கள், தெரு விளக்குகள், புதர்செடிகளை அகற்றுதல் மற்றும் அனைத்து தொழிற்பேட்டைகளின் நுழைவாயில்களிலும் பெயர் பலகை வைத்தல் போன்ற பராமரிப்புகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மீதம் உள்ள தொழிற்மனைகளிலும் இதுபோன்ற பராமரிப்பு பணிகளை, அங்கு தொழில் நடத்தும் நிறுவனங்களை கொண்டு சங்கங்கள் அமைத்து, அவர்களின் பங்களிப்புடன், அரசின் பங்களிப்பையும் வழங்கி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அனைத்து தொழிற்பேட்டைகளிலும் சீரான பராமரிப்பு தொகையை நிர்ணயிக்க வேண்டும் எனவும்  தெரிவித்தார்.

மேலும், மனை தொகை, பராமரிப்புக் கட்டண வசூலில் எவ்வித தோய்வும் இன்றி உடனடியாக வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். நடப்பாண்டு அறிவிக்கப்பட்ட 9 புதிய திட்டங்களின் பல்வேறு நிலை குறித்தும், கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 14 திட்டங்களில், நிறைவேற்றப்பட்ட 7 திட்டங்களை தவிர்த்து, பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் புதிய தொழிற்பேட்டைகள், பொது வசதி மையங்கள், பொது உற்பத்தி மையங்கள் ஆகிய 7 திட்டங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஒன்றிய அரசுக்கு பரித்துரைத்துள்ள திட்டங்களுக்கான அனுமதிகளை துரிதமாக பெற்று பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

ஒதுக்கீடு ஆணைகள் வழங்கி  தொழில் தொடங்காத நிறுவனங்களுக்கு விளக்கம் கோரி, உரிய கால அவகாசம் வழங்கி, தொழில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், உரிய கால அவகாசம் வழங்கி தொழில் தொடங்காத நிறுவனங்களின் ஒதுக்கீட்டினை ரத்து செய்யவும் கிளை மேலாளர்களுக்கு உத்தரவிட்டார். பொது வசதி மையங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.345.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 16 பொது வசதி மையங்களான, சேலம் விசைத்தறி மற்றும் மரச்சாமான்கள் குழுமம், விருதுநகர் தீப்பெட்டி குழுமம், திருப்பூர் பின்னலாடை மற்றும் ஆடை குழுமம், நாமக்கல் வாகன கட்டுமான குழுமங்களும், ரூ.33.08 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 8 பொது உற்பத்தி மைய திட்டப் பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடித்து தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வெண்டுமென அறிவுறுத்தினார்.

தமிழக அரசின் குறு குழும வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.23.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் விருதுநகர்-நெசவு குழுமம், கோவை-அலுமினியம் அச்சு வார்ப்பு குழுமம் மற்றும் தங்க நகை ஹால்மார்க் குழுமம், கடலூர் - பீங்கான் மின்காப்பு உபகரணம், ஈரோடு-மஞ்சுள் உற்பத்தி குழுமம், ஜமக்கால உற்பத்தி குழுமம் ஆகிய குறு குழுமங்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென தெரிவித்தார்.

மேலும், தனியார் தொழிற்பேட்டை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் மானியத்துடன் ரூ.137.19 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 9 தொழிற்பேட்டைகளில், தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையினை விரைந்து பெற்று பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தார். இதற்காக தொழில் நிறுவனங்களுடனான கலந்தாய்வு கூட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக நடத்தவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அலுவலர்கள் தெரிவித்த நிர்வாக ரீதியான கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு துறை உயர் அலுவலர்களை கேட்டுக் கொண்டு, சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு உறுதுணையாக இருந்து தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், சிட்கோவுக்கும் தங்களது சிறப்பான பணியை வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசின் ரூ.161.20 கோடி மானியம், ஒன்றிய அரசின் ரூ.367.81 கோடி மானியம் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் ரூ.739.27 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் 78 திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசுச் செயலாளர் திரு.வி. அருண்ராய், இ.ஆ.ப., தமிழ்நாடு சிட்கோ மேலாண்மை இயக்குநர் திருமதி. ஆர்.கெஜலட்சுமி, இ.ஆ.ப., பொது மேலாளர் செல்வி. ஆர்.பேபி மற்றும் நிறுவனத்தின் பொறியாளர்கள், உயர் அலுவலர்கள், கிளை மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: