சாலை அமைக்க நிலம் எடுப்பு; மாற்றிடம் வழங்ககோரி கலெக்டர் ஆபீசை கிராம மக்கள் முற்றுகை

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் சத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன்பிறகு பொதுமக்கள் கூறியதாவது; போளிவாக்கம் சத்திரம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக  60 குடும்பங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வீடுகட்டி வசித்து வருகிறோம். தற்போது தேசிய நெடுஞ்சாலை துறை வெளிவட்ட சாலை திட்டத்தின் கீழ் நில எடுப்பு தாசில்தார் எங்களது வீடுகளை காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

எங்களது வீடுகளை அரசால் அப்புறப்படுத்தும்போது வேறு இடத்திற்கு குடிபெயரும் நிலைமை உள்ளது. எனவே, எங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் எங்கள் பகுதியை ஒட்டியுள்ள சுமார் 7 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலத்தில் மேற்கண்ட எங்களுக்கு தலா 3 சென்ட் இடம் ஒதுக்கி தரவேண்டும். பாதிக்கப்படும் குடும்பங்களில் அனைத்து சாதி, மதத்தினரும் உள்ளதால் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சமத்துவபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

இதுதொடர்பான புகார் மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் எம்.சி.தமிழ்வளவன் தலைமையில், மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ‘’உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: