தாராபுரம் பாசன விவசாயிகள் சங்க தேர்தல் விவகாரம் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: தாராபுரம் பாசன விவசாயிகள் சங்க தேர்தல் தொடர்பான பிரச்னையில் விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டதாக தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜ துணைத் தலைவர் சுகுமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தாராபுரம் தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உப்பாறு அணை, பரம்பிக்குளம், ஆழியாறு, அமராவதி உள்ளிட்ட சுமார் 31 நீர் நிலைகளின் நீரை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன.

தமிழ்நாடு விவசாய பாசன முறை சட்டத்தின்படி ஒவ்வொரு சங்கத்திற்கும் ஒரு நிர்வாக குழு இருக்க வேண்டும். இந்த குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யக்கூடிய அதிகாரம் மாவட்ட கலெக்டருக்கு உள்ளது. நிர்வாக குழுவின் தேர்தலை நடத்த குமரேசன் என்பவரை தேர்தல் அதிகாரியாக நியமித்தும், கடந்த மார்ச் மாதம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் தேர்தல் அதிகாரியாக அறிவித்த குமரேசன் என்பவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ரகசிய வாக்கெடுப்பை நடத்தி, வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களை எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் நிராகரித்துள்ளார்.

நிர்வாக குழுவினுடைய 31 தலைவர்கள் மற்றும் 136 உறுப்பினர்களை தேர்வு செய்தும் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார். தேர்தல் நடைமுறையை முறையாக பின்பற்றாமல் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்கள் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: