உடுமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை: சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி உடுமலை அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட மூங்கில் தொழுவு கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி அமைந்துள்ளது. திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மூங்கில்தொழுவு, சி.நாகூர், சிக்கனூத்து, மூங்கில் தொழுவு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மூங்கில்தொழுவு ஆதிதிராவிடர் காலனியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் சமைக்க கூட தண்ணீர் இன்றி மிகுந்த அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த  50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் இன்று காலை 8 மணி அளவில் மூங்கில்தொழுவு பிரிவு நால்ரோட்டில்  காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக நெகமம் ,கோவை, பெதப்பம்பட்டி, உடுமலை, ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மின்சார வயர் துண்டிப்பால்  மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு நீரேற்றம் செய்ய முடியவில்லை என்றும் இணைப்புகள் சரி செய்த பின்னர் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: