கொருக்குப்பேட்டையில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற பெண் கைது: 1200 கிலோ பறிமுதல்

அம்பத்தூர்: கொருக்குப்பேட்டையில் இருந்து ஆந்திராவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒரு பெண்ணை நேற்று மாலை அம்பத்தூர் குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1200 கிலோ எடை கொண்ட 40 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை இயக்குநர் ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில், எஸ்பி ஸ்டாலின் மேற்பார்வையில், ஏஎஸ்பி நாகராஜன் வழிகாட்டுதலில், இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ், எஸ்ஐ ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று மாலை கொருக்குப்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்குள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, அவற்றை சிறுசிறு மூட்டைகளாக கட்டி, ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தி செல்ல தயார்நிலையில் இருப்பது குடிமைபொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு ரேஷன் அரிசி மூட்டைகளை ரயிலில் கடத்த முயன்ற பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த ருக்மணி (53) எனத் தெரியவந்தது. இதுகுறித்து அம்பத்தூர் குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ருக்மணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1200 கிலோ எடை கொண்ட 40 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: