புதிய கல்விக் கொள்கை மூலம் பாரம்பரிய பண்புகளை மீட்கலாம்: தேசிய கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

திருவாரூர்: புதிய கல்விக் கொள்கை மூலம் பாரம்பரிய பண்புகளை மீட்கலாம் என்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கூறினார். திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் ஒன்றிய அரசின் 2020 தேசிய கல்வி கொள்கை குறித்து 2 நாள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது. இந்த கருத்தரங்கை துவக்கி வைத்து தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:

இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். பாரதம் என்பது தான் உண்மையான பெயர். இந்த பாரத நாட்டில் ஆங்கிலேயர்கள் பாரம்பரியமாக இருந்து வந்த கல்வி மற்றும் தொழில்களை அழித்துவிட்டனர். இதற்கான ஆதாரம் சென்னை ஆவண காப்பகத்தில் உள்ளது. இவை அனைத்தையும் மீட்க வேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் ஏற்கனவே கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்த புதிய கல்விக் கொள்கை என்பது நாட்டின் பாரம்பரிய பண்புகளை மீட்கக் கூடியதாகும்.

கடந்த 2014ம் ஆண்டுக்குப் பின்பு நாடு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருவதால் உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது இருந்து வருகிறது. மாணவர்கள் உணர்வில் வலிமையாகவும், மனதில் ஆன்மீகம் கொண்டும், அறிவில் கல்வியை கொண்டும் செயல்பட வேண்டும் என்பதுடன் இந்த தேசிய கல்விக் கொள்கையை என்பது புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கும் என்பதால் கல்வியாளர்கள் இதனை நன்கு படித்து செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் பேராசிரியர்கள் முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: