நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நிரபராதி!: போதை பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை தாக்கல்..!!

மும்பை: நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானும், அவரின் நண்பர்களும் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற கார்டெல்லா குருஸ் கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் வைத்திருந்ததாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். ஆர்யன் கான் ஒரு மாதம் சிறையில் இருந்த பிறகு ஜாமீனில் விடுவிக்குமாறு அக்டோபர் 30ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே விசாரித்துவந்தார்.

ஆனால் சமீர் வான்கடே பணம் பறிப்பதற்காக இந்த கைது நாடகத்தை நடத்தியதாக மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து சமீர் வான்கடே இந்த வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆர்யன் கான் வழக்கை இப்போது போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு, ஆர்யன் கான் நிரபராதி என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆர்யன் கான் போதைப்பொருள் தொடர்பாக பெரிய அளவில் எந்தவிதச் சதியிலும் ஈடுபடவில்லை என்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்றும் தெரியவந்தது. அதோடு ஆர்யன் கானை கைது செய்ய ரெய்டு நடத்தப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ரெய்டின் போது ஆர்யன் கானிடம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: