×

மணம் கமழும் மூலிகை சாம்பிராணி!

சுபம் அல்லது துக்கம் என எல்லா சடங்குகளுக்கும் ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்கள் இருக்கலாம். காலப்போக்கில் அதில் சில சம்பிரதாயங்கள் வழக்கொழிந்து போயும் இருக்கலாம். ஆனால், கமகம என மணம் பரப்பும் சாம்பிராணி இல்லாத ஒரு சடங்கு கண்டிப்பாக இருக்காது. சர்வ ரோக சகல நிவாரணி என புகழப்படும் சாம்பிராணி, குங்கலிய மரத்தின் பாலில் இருந்து இயற்கையில் உருவாகும் அற்புத பொருள். வீட்டில் சாம்பிராணி மணம் கமழ்ந்தால், சங்கடம் தீர்வது மட்டுமல்லாமல், நம்மை சுற்றி ஒரு நேர்மறை எண்ணங்கள் ஏற்படும். மேலும் அதன் நறுமணம் மனதுக்கும் இதம் அளிக்கும். இவ்வாறு பல நன்மைகளைக் கொண்ட சாம்பிராணியை இயற்கை முறையில் தயாரித்து வருகிறார் தொழில்முனைவர் கவிதா.

கஸ்தூரி மூலிகை சாம்பிராணி எனும் முத்திரையுடன் தமிழகத்தில் பிரபலமாகி உள்ள அவரது தயாரிப்பு இப்போது சிங்கப்பூர், மலேசிய நாடுகளையும் ஈர்த்துள்ளது. ‘‘வாழ்க்கையில் எதுவுமே கை கூடாமல், 8 ஆண்டுக்கு முன் மிகவும் சோர்ந்து போனேன். சதுரகிரி முருகன் கோயிலில் வேண்டிக் கொள்ளுங்கள் என பலரும் கூறியதை அடுத்து அங்கு சென்றேன். அது தான் எனது வாழ்வில் திருப்புமுனை. சில மூலிகைகளை சாம்பிராணியுடன் கலந்து தூபம் வீட்டில் போடுங்க, தரித்திரம் நீங்கி ஐஸ்வர்யம் பெருகும் என அங்கு சாமியார் ஒருவர் கூறினார்.

நம்பிக்கையோடு அவர் கூறியதை நிறைவேற்றினேன். அதன் பிறகு எல்லாமே நல்லதாகவே நடக்க ஆரம்பித்தது. வெறும் சாம்பிராணி மட்டுமின்றி சில மூலிகைகளும் சேர்ந்ததால் நிம்மதியான வாழ்க்கை கிடைத்த எனக்கு, அனைவருக்கும் அப்படியே அமைந்தால் எல்லோருமே சுபிட்சமாக இருக்கலாம் எனும் நோக்கத்துடன் சாம்பிராணியுடன் மூலிகை கலந்து வியாபாரம் தொடங்கினேன். வியாபாரம் என்றால் முதல் போட்டோம், கொஞ்சம் லாபம் வச்சோம், வசூலாச்சு என்று நினைத்தேன். ஆனால் மார்க்கெட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை நான் புரிந்து கொள்ளவே சில மாதங்கள் ஆனது.

எனினும், தளராத முயற்சியில் படிப்படியாக வளர்ச்சியை கண்டேன். சதுரகிரி மட்டுமின்றி, நெல்லையப்பர் கோயில், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் உள்பட அப்படி, இப்படி என நான் தயாரிக்கும் 20 வகை மூலிகை சாம்பிராணி, நுகர்வோர் சந்தையில் ஒரு தனி அங்கம் வகிக்கத் தொடங்கியுள்ளது. கஸ்தூரி சாம்பிராணி இருக்கா என கேட்டு வாங்கும் அளவுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் என்னுடைய சாம்பிராணியை பலர் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். தற்போது 65 மூலிகை பொருட்களில் பலவித சாம்பிராணிகளை உற்பத்தி செய்து வருகிறேன்’’ என்றார் கவிதா.

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!