ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை விழா கலை நிகழ்ச்சி: சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஒயிலாட்டம்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த கோடை விழா கலைநிகழ்ச்சிகளில் ஒயிலாட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. சர்வதேச சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிவார்கள்.

இந்த ஆண்டு கோடை விழாவை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் கண்காட்சிகள், சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி, கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கடந்த 18ம் தேதி முதல் ஊட்டி படகு இல்லம், பழங்குடியினர் பண்பாட்டு மையம் ஆகிய இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்த நிலையில், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நேற்றைய தினம் மழையின்றி இதமான காலநிலை நிலவிய நிலையில், கலைக்குழு சார்பில் பெரிய புல் மைதானத்தில் ஒயிலாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் பங்கேற்று இசைக்கேற்ப நடனமாடி மகிழ்ந்தனர். ஒயிலாட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததுடன், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 31ம் தேதி வரை தாவரவியல் பூங்காவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Related Stories: