இதமான காலநிலையால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஊட்டி: இதமான காலநிலை நிலவிய நிலையில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா தளங்கள் மட்டுமின்றி நகருக்கு வெளியே அமைந்துள்ள சுற்றுலா தளங்களும் களை கட்டின. கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக நீலகிரியில் கோடை விழாக்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொற்று கட்டுப்படுத்தப்பட்டதால் கோடை விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. தொடர்ந்து வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  இதன் தொடர்ச்சியாக, 124வது மலர் கண்காட்சி கடந்த 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.  

மலர் கண்காட்சி நிறைவடைந்த பின்னரும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. அதற்கேற்ப நேற்று மழையின்றி லேசான வெயிலுடன் இதமான காலநிலை நிலவிய நிலையில், ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

குறிப்பாக, மலர் கண்காட்சியை முன்னிட்டு கார்னேசன் மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட வேளாண் பல்கலைக்கழக முகப்பு தோற்றத்தின் மாதிரியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும், மலர் அலங்காரங்களையும் பார்த்து ரசித்தனர். இதனிடையே, வரும் 28, 29ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் இந்த வார இறுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: