சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் ரூ.5 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்த தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டுள்ளது. ஏடிபி அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் கடந்த 1991ம் ஆண்டு முதல் சென்னையில் நடத்தப்பட்டு வந்தன. 2018ம் ஆண்டு இப்போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், டபிள்யு.டி.ஏ. அந்தஸ்து பெற்ற உலக மகளிர் டென்னிஸ் போட்டி முதல் முறையாக தமிழகத்தில், வரும் செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை சென்னையில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பலர் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியை நடத்துவதற்காக ரூ.5 கோடி நிதி வழங்க வேண்டுமென தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி ஒதுக்குவதாக ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்த தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று அரசாணை வெளியிட்டது.

Related Stories: