சென்ட்ரல் நிலையத்தில் காணாமல் போன குழந்தையை 30 நிமிடத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைப்பு: ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்தனர்

சென்னை: சென்ட்ரல் நிலையத்தில் காணாமல் போன குழந்தையை 30 நிமிடத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு பொதுமக்கள் மற்றும் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் வினோத் குமார், இவரது மனைவி லதா. இவர்களின் ஒன்றரை வயது மகன் ருத்விக். இவர்கள் குடும்பத்துடன் திருப்பதி சென்று மகனுக்கு மொட்டை அடித்து விட்டு மீண்டும் விசாகப்பட்டினம் செல்வதற்காக நேற்று முன்தினம் அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென குழந்தை ருத்விக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வினோத்குமார் தம்பதியினர் ரயில் நிலையம் முழுவதும் தேடிப்பார்த்துள்னர். ஆனால் குழந்தை ரித்விக்கை காணவில்லை.

 இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தவறவிட்ட குழந்தையை உடனடியாக மீட்க ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் செந்தில் குமரேசன்  தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பின்னர் சுமார் 30 நிமிடத்தில் சிசிடிவி காட்சி உதவியுடன் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் அவர்கள் விசாகப்பட்டினத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். குழந்தையை அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டவர்கள் மீட்டு ரயில்வே பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: