சென்னையில் இன்று நடக்கும் பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி-முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பங்கேற்பு: சென்னையில் 22 ஆயிரம் போலீஸ் அடங்கிய 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில், பிரதமர் மோடி ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்பணிக்கிறார். இதனால் அவர் கலந்து கொள்ளும் பகுதிகளில் 22 ஆயிரம் போலீஸ் அடங்கிய 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐதராபாத் மற்றும் சென்னைக்கு பயணம் மேற்கொள்கிறார். ஐதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) கல்வி நிறுவனத்தின் 20வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிற்பகல் 2 மணியளவில் பிரதமர் பங்கேற்கிறார். அதை தொடர்ந்து, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வருகை தருகிறார். இதற்காக அவர் இன்று மாலை 3.55 மணி அளவில் ஐதரபாத்தில் இருந்து இந்திய விமானபடைக்கு சொந்தமான விமானத்தில் சென்னை வருகிறார்.

இதையடுத்து, நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெறும் விழாவில், ரூ.31,400 கோடி மதிப்பிலான 11  திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து சிறப்புரையாற்றுகிறார். விழாவுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி,  முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றனர். ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஒன்றிய ரயில்வே தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, ஒன்றிய இணை அமைச்சர்கள் வி.கே.சிங், எல்.முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.  

சென்னையில் ரூ.29,000 கோடி மதிப்பிலான 5 திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இதேபோன்று சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கு ரூ. 590 கோடி மதிப்பில் 3-வது ரயில்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.  ரூ.28,500 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள 6 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் (என்எச்-4), 21 கி.மீ. தூர ஈரடுக்கு, நான்குவழி உயர்மட்டச்சாலை, ரூ.5850 கோடி செலவில் கட்டப்படும். எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்படும்.இந்தத் திட்டம் ரூ. 1800 கோடி செலவில் முடிக்கப்படும்.

ரூ.1400 கோடி மதிப்பில் சென்னையில் உருவாக்கப்படவுள்ள பல்முனை சரக்கு போக்குவரத்துப் பூங்காவுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவுக்கு இடையில், பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து, தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவையும் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் நேற்று வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதமர் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதேபோல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் 5 கூடுதல் கமிஷனர்கள், 8 இணை கமிஷனர்கள்,29 துணை கமிஷனர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என மொத்தம் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் பிரதமர் வரும் அடையார் ஐஎன்எஸ் மைதானம் வரை சாலை நெடுக்கிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ள நபர்கள் மற்றும் குற்றம் பின்னணியில் உள்ள நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

* குண்டு துளைக்காத கார் மூலம் ஒத்திகை

மோடி இன்று சென்னை வருகிறார். இதனால் நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் பிரதம் பயன்படுத்துவதற்காக குண்டுகள் துளைக்காத கார் டெல்லியில் இருந்து சென்னைக்கு பிரதமர் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் கொண்டு வரப்பட்டது.. இதையடுத்து நேற்று மாலை பிரதமர் செல்லும் பாதையில் டெல்லியில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தமிழகம் போலீசார் இணைந்து வாகன பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரதமர் போல் ஒருவர் அடயைார் ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் இருந்து குண்டு துளைக்காத காரில் பயனம் மேற்கொண்டார்.

* டிரோன் கேமராக்கள் பறக்க தடை

பிரதமர் இன்று சென்னை வருகையேயொட்டி பாதுகாப்பு காரணமாக சென்னையில் டிரோன் கேமராக்க மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாநகர காவல் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் தடை உத்தரவை மீறி யாரேனும் டிரோன் கேமராக்கள் பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* பிரதமர் வருகை அட்டவணை

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு சரியாக மாலை 5.10 மணிக்கு வந்தடைகிறார். பிறகு விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். அதைதொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வருகிறார். பிறகு நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து இரவு 7.05 மணிக்கு குண்டு துளைக்காத கார் மூலம் சாலை மார்கமாக புறப்பட்டு மீண்டும் அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வந்து ஹெரிக்காப்டர் மூலம் 7.35 மணிக்கு விமான நிலையம் செல்கிறார். பிறகு 7.40 மணிக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். இரவு 10.25 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை பிரதமர் மோடி வந்தடைவார்.

Related Stories: