விலைவாசி உயர்வை தடுக்க சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: சர்க்கரை கையிருப்பை பராமரிப்பதற்கும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் வரும் 1ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டு, சர்க்கரைக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை கையிருப்பை உறுதி செய்யவும், சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்கவும், அதன் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து, எந்த சர்க்கரை ஏற்றுமதியாக இருந்தாலும், அதற்கு உணவு மற்றும் பொது விநியோகத் துறை இயக்குனரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீறும் சர்க்கரை ஆலைகள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மற்றும் சர்க்கரை கட்டுப்பாடு ஆணை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.  இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜூன் 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரையில் அல்லது மறு உத்தரவு வரும் வரை உணவு மற்றும் பொதுவினியோகத் துறை ஒப்புதல் பெற்று சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். ஒரு கோடி  டன் வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். நடப்பு ஆண்டில் உலகிலேயே அதிக சர்க்கரை உற்பத்தி, 2வது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.

நடப்பு சந்தை ஆண்டான (அக்டோபர்-செப்டம்பர்) 90 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உயுள்ளது. இதில், கிட்டத்தட்ட 70 லட்சம் டன் ஏற்றுமதி ஆகியுள்ளது.,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021-22ம் ஆண்டில் சர்க்கரை ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் 70 லட்சம் டன்னும், 2019-20ம் ஆண்டில் கிட்டத்தட்ட 60 லட்சம் டன்னும் ஏற்றுமதி ஆகியுள்ளது.

Related Stories: