மொடக்குறிச்சி அருகே கிணற்றுக்குள் விழுந்த போர்வெல் லாரி மீட்பு

மொடக்குறிச்சி: பாசூர் அருகே தோட்டத்து கிணற்றில் விழுந்து மூழ்கிய போர்வெல் லாரி மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த பாசூர் அருகே உள்ள பழனிக்கவுண்டன்பாளையம், பறையன்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்த மணிவேல். விவசாயி. இவரது தோட்டத்தில் போர்வெல் அமைக்கப்பதற்காக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோகனப்பிரியா என்பவருக்கு சொந்தமான போர்வெல் லாரி நேற்று வந்துள்ளது. லாரியை திருச்செங்கோடு அடுத்த மொளசியைச் சேர்ந்த ராமசாமி (58) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

தோட்டத்திற்கு செல்லும் வழியில் ரத்தினசாமி என்பவருக்கு சொந்தமாக 50 அடி ஆழ கிணறு அருகே செல்லும்போது பின்புறமாக லாரியை திருப்பி உள்ளார். இதில் கிணற்றின் பக்கவாட்டு சுவர் மீது மோதிய லாரி பின்புறமாக கிணற்றுக்குள் விழுந்து மூழ்கியது. லாரி டிரைவர் ராமசாமி நீச்சல் அடித்தபடி வெளியே வந்து தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றி கிரேன் மூலம் லாரியை மீட்டனர்.

Related Stories: