ஆரல்வாய்மொழி அருகே பரபரப்பு குருசடியில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி அருகே குருசடியில் உண்டியல் உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆரல்வாய்மொழி அருகே சீதப்பால் பகுதியில் புனித ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் கட்டுப்பாட்டில் செண்பகராமன்புதூர்- பூதப்பாண்டி நெடுஞ்சாலையில் சீதப்பால் ஆற்றங்கரை காலனி அருகே அதிசய மிக்கேல் அரித்தூதர் குருசடி உள்ளது. இந்த குருசடிக்கு அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்த பகுதி நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளதால் ஆள்நடமாட்டம் குறைவு. எனவே குருசடியை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை குருசடிக்கு வந்த பொதுமக்கள் உள்கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் சிசிடிவி பதிவாகும் செட் ஆப் பாக்சையும் மர்ம நபர்கள் தூக்கிசென்றது தெரிய வந்தது. இதையடுத்து ஆரோக்கிய நாதர் ஆலய பங்கு தந்தை ரஞ்சித் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் குருசடிக்கு விரைந்து வந்தார்.

பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் மீனா, உதவி ஆய்வாளர் லாரன்ஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் உண்டியலில் இருந்து ரூ.25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குருசடிக்கு அருகே உள்ள சில நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: