×

இன்ஸ்டன்ட் உற்சாக டிப்ஸ்..!

நன்றி குங்குமம் தோழி

இளைய தலைமுறையினருக்கு எதுவும் உடனடியாக கிடைத்து விட வேண்டும். இன்ஸ்டன்ட் காபி, இஸ்டன்ட் நூடுல்ஸ் போல் உற்சாகமும் ஒரு சொடுக்கில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அத்தகைய மனப்பான்மை கொண்டவருக்காகவே, உற்சாகமான மனநிலையைப் பெறுவதற்கு, எளிமையான நான்கு டிப்ஸ் இதோ...

பழைய உணர்வுகளை பதிவு செய்யலாம்

மகிழ்ச்சியான மனதைப் பெற, முதலில் எதிர்பார்ப்பு மனப்பான்மையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களின் பழைய உணர்வுகளை எழுத்து வடிவில் பதிவு செய்யலாம். மேலும், அன்றாடம் உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி, கார் அல்லது டூ வீலர் ஓட்டுதல், சைக்ளிங், சிறிது நேர தூக்கம், மசாஜ் செய்தல்... இவை எல்லாம் உங்கள் மனதில்  எதிர்பார்ப்பு மனப்பான்மை காரணமாக ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகளில் இருந்து உங்களை விடுவிக்க உதவும். சிலருக்கு எழுதுவதில் ஆர்வம் இருக்கும். அவர்கள் தங்களின் படைப்புகளை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவதன் மூலம் அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளை புரிந்து கொள்ள முடியும்.

வேண்டாமே... கடின முயற்சி!

இத்தலைப்பைப் படித்ததும், என்னடா! இது எதிர்மறையாக உள்ளதே என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எங்களுக்குக் கேட்காமல் இல்லை. ஆனால், சைக்காலஜிக்கல் சயின்ஸ் என்ற இதழில் வெளியான ஆய்வு முடிவுகள், சந்தோஷமான மனநிலையைப் பெறுவதற்கு அதிக அளவு கடினமாக உழைப்பு தேவையில்லை என்று வெளியிட்டுள்ளது.

ஏனெனில், மகிழ்ச்சியான உள்ளத்தை அடையும் பொருட்டு, அளவு கடந்த பங்களிப்பைக் கொடுக்கும் சூழலில் அது பின்னடைவையே ஏற்படுத்தும். அதனால் வேலையாக இருந்தாலும் குடும்ப பொறுப்பை ஏற்று நடந்தாலும், எல்லாவற்றையும் முகத்தில் ஒரு புன்சிரிப்போடு செய்துப் பாருங்கள் சந்தோஷம் தானாக பற்றிக் கொள்ளும்.

தூக்கம்-ஓர் அருமருந்து!

பெரும்பாலான நேரங்களில், அதிக வேலை மற்றும் மன உளைச்சல் காரணமாக, உற்சாகம் நம்மைத் தொற்றிக்கொள்வதை உணருவதற்கு முன்னரே, உடல் மற்றும் மனரீதியாக நாம் முற்றிலும் சோர்வடைந்து விடுகிறோம். ஆனால், இதைப் புரிந்து கொள்வதற்கு, நமக்கு நாமே போதுமான நேரத்தைக் கொடுப்பது இல்லை. விழாக்கால கொண்டாட்டங்களை துள்ளலுடன் பயணிக்க கற்றுக் கொள்ளுங்கள். உற்சாகம் தானாகவே உங்களை ஆட்கொள்ளும். அதே சமயம் உங்களுக்குள் ஏற்படும் சோகம் மற்றும் கோபத்தை விலகி வைக்க கற்றுக் கொள்ளுங்கள். கோவப்படுவதாலோ, சோகத்தை சுமந்து கொண்டு இருந்தாலோ அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது. எல்லா நிகழ்வுக்கும் ஒரு தீர்வுண்டு என்று உற்சாகமாக செயல்படுங்கள்.

ஸ்பா உற்சாகம்

வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி... இருவருமே ஒரு விதமான ஸ்ட்ரெசை அனுபவித்து தான் வருகிறார்கள். வேலை ஒரு புறம் என்றால், வீட்டிற்கு வந்தவுடன் அந்த வேலையும் பார்க்க வேண்டும். இதனால் பெரும்பாலான பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதை ரிலாக்ஸ் செய்ய ஸ்பாவிற்கு செல்லலாம். தலை முதல் பாதம் வரை உங்க மனம் மற்றும் உடலில் உள்ள டென்ஷனை ரிலாக்ஸ் செய்யவும் இன்ஸ்டன்ட் நிமிடத்தில் உற்சாகம் பிறக்கவும் இது வழிவகுக்கும். ஸ்பா என்றதும், கட்டணம் அதிகமாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். அவரவரின் தேவைக்கு ஏற்பவும் உள்ளது.

தொகுப்பு: எஸ்.விஜயகுமார்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!