தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் உலகின் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறும்: ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சேலம்: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும், இந்த ஆட்சி 5 ஆண்டுகளையும் கடந்து நீடிக்கும்போது இந்தியாவில் முதன்மை மாநிலமாகவும் உலகின் சிறந்த மாநிலமாகவும் தமிழகம் மாறும் என்று ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையத்தில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் வழங்கப்பட்ட 13 அடி வெள்ளி செங்கோல் மற்றும் நினைவுப்பரிசை பெற்றுக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:கடந்த மே 7ம் தேதி, உங்களில் ஒருவனாக, தலைமை தொண்டனாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் முதல்வராக பொறுப்பேற்றேன். அப்போது எனக்குள் ஒரு கலக்கம் இருந்தது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியால் தமிழகம் பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது. இதை ஓரளவாவது சீர் செய்ய முடியுமா என்பதே தயக்கத்திற்கு காரணம்.

தமிழகம் ₹6 லட்சம் கோடி கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால், இன்று தமிழகம் வீழ்ச்சியில் இருந்து மீண்டு தலை நிமிர்ந்து நிற்கிறது. துவண்டு கிடந்த மாநிலம், துள்ளி விளையாடுகிறது. முடங்கிக் கிடந்த பணிகள் புத்துணர்வு பெற்றுள்ளது. நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வந்துள்ளோம். தரையில் வீழ்ந்து கிடந்த தமிழ்நாடு, இன்று உயிர்த்து நிற்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மிகுந்த நம்பிக்கையோடு செயல்பட்டு, இந்தியாவின் சிறந்த மாநிலம் மட்டுமின்றி, அனைத்து வளங்களும் நிறைந்த மாநிலமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. 5 ஆண்டுகளை கடந்தும் இந்த ஆட்சி  நீடிக்கும் போது, இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமல்லாமல் உலகின்  சிறந்த மாநிலமாகவும் தமிழகம் உருவெடுக்கும்.  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் மட்டும் பணவீக்கம் குறைந்துள்ளது. இதை நான் சொல்லவில்லை. ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் சொல்கிறது.  எனது கொளத்தூர் தொகுதியைப் போலவே, இந்த ஆத்தூர் தொகுதியையும், எடப்பாடி தொகுதியையும், போடி தொகுதியையும் நினைக்கிறேன். தேர்தலுக்கு முன்புதான், அதிமுக தொகுதிகள், திமுக தொகுதிகள் என்ற நிலை இருந்தது. இப்போது 234 தொகுதிகளையும் எனது சொந்த தொகுதிகளாகவே கருதுகிறேன். இதனால் தான், எதிர்க்கட்சிகள் கூட நம்மை பாராட்டுகின்றன. இவ்வளவு நன்மைகள் நடக்க மக்களே காரணம். அதை நிறைவேற்றும் கருவி மட்டுமே நான்.

எவரது பக்திக்கும் திமுக தடையாக இருக்காது. எப்போதும் மதச்சார்பற்ற அரசாகவே இது விளங்கும், இந்த ஆட்சியில் தான், இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. கோயில் சொத்து ஆவணங்கள் அனைத்தும், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கலைக்கல்லூரிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 81 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  உண்மையான ஆன்மிகவாதிகள் இதை ஆதரிக்க வேண்டும். ஆனால், குறை சொல்வதிலேயே குறியாக உள்ளனர்.  சேலத்தை சேர்ந்த ஒருவர் 4 வருடங்களாக முதல்வராக இருந்தார். தேர்தலுக்கு முன்பாக 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு கேட்டு பதிவு செய்திருந்தனர். யாருக்கும் அவர் வேலை தரவில்லை. வேலைக்காக ஒரு திட்டத்தையும் தீட்டவில்லை. எதை கேட்டும், அவர் கொடுக்கவில்லை. அவர் இன்று தினம்தோறும் இந்த ஆட்சியை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 பொள்ளாச்சி பாலியல் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொடநாடு கொலை, கொள்ளை இதுதான் அவரது ஆட்சியின் சாதனைகள். ஆனால், திமுக அரசு 10 ஆண்டுகால சாதனையை, கடந்த ஓராண்டில் செய்து முடித்துள்ளது.  திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த போது, முடியவே முடியாது என்றனர். ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் 3 ரூபாய் குறைத்தோம். இதனால், அரசுக்கு ₹1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை இழப்பு என்பதை விட, மக்களுக்கு வழங்கிய சலுகை என்றே நான் கருதுகிறேன். 5 மாநில தேர்தல்களை கவனத்தில் கொண்டு, கடந்த மார்ச் மாதத்தில் பெட்ரோல் விலையை சிறிய அளவில் குறைத்தனர். பின்னர் மீண்டும் அதிகரித்து, தற்போது ₹9.50 குறைத்துள்ளனர். மாநில அரசின் அனைத்து வருவாய் இனங்களையும் ஒன்றிய அரசு சுரண்டிக் கொண்டு, பழியை எங்கள் மீது சுமத்துகிறது. மாநிலத்தில் மக்களுக்கு கல்வி, மருத்துவம், சுகாதாரம், சத்துணவு என அனைத்தையும் வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. இதனை செயல்படுத்த ஒன்றிய அரசு போதிய நிதி வழங்கவேண்டும். ஆனால், ₹21,721 கோடி நிலுவைத் தொகை வைத்துள்ளது. இதனால்தான் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிதி நெருக்கடியிலும் நாங்கள் சாதனைகளைச் செய்து வருகிறோம்.

 இந்த சாதனைகளை கருப்பு- சிவப்பு கொடியோடு, தொண்டர்கள் வீதிகள் தோறும் சென்று மக்களிடம் விளக்க வேண்டும், ஒவ்வொருவர் மனதிலும் நமது சாதனைகளை விதைக்க வேண்டும். தேர்தல் காலத்தில் தரப்பட்ட வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும், நிச்சயமாக நான் மறக்க மாட்டேன். அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக எனது சக்தியை மீறியும் உழைக்க தயாராக இருக்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞர், கருப்பு, சிவப்பு, சமூக நீதி என்ற 6ம் இங்கே ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. அது நம் தமிழகத்தை வளப்படுத்தும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். எதிலும் குறை சொல்ல முடியாது என்பதால், ஆன்மிகத்தை கையில் எடுத்துள்ளனர். எவரது பக்திக்கும் திமுக தடையாக இருக்காது. எப்போதும் மதச்சார்பற்ற அரசாகவே இது விளங்கும்,

திராவிட மாடல் என்றால் என்ன?

மு.க.ஸ்டாலின் பேசுகையில், சமூக நீதியையும், சமத்துவத்தையும் காத்து, அனைத்து தரப்பு மக்களையும் மேம்படுத்துவதுதான் திராவிட மாடல். சமூகநீதி, சமத்துவம், பொருளாதார வளர்ச்சி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை  உணர்த்துவது தான்  திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சி யாரையும் பிரிக்காது, அனைவரையும் இணைக்கும். எவரையும் வெறுக்காது, எல்லோரையும் அணைக்கும். உலகில் 130 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். நம்மால் முடியும் என்பதை  திராவிட மாடல் ஆட்சி உணர்த்தும். தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய இலக்கை  எட்ட வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் நேரத்திலும்,  நரிக்குறவர் பெண்ணின் குரலுக்கும் செவி சாய்ப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.  இது ஒரு கட்சியால் நடத்தப்படும் அரசல்ல- ஒரு இனத்தால் நடத்தப்படும் அரசு என்றார்.

Related Stories: