நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையில் கூடுதலாக நில எடுப்பு பிரிவு தோற்றுவிப்பு

* நடப்பாண்டில் 802 ஹெக்டேர் நில எடுப்பிற்கு ₹1731.40 கோடி இழப்பீடு

* அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை:தமிழக நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான நிலம் கையகப்படுத்துவதை வேகப்படுத்துவது குறித்து, அமைச்சர் எ.வ.வேலு  தலைமையில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ் குமார், நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், திட்ட இயக்குனர் கணேசன்  உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:நெடுஞ்சாலைத்துறையில் நடந்து வரும்  புறவழிச்சாலைகள், ரயில்வே மேம்பாலங்கள், ஆற்றுப் பாலங்களின் அணுகுசாலைகள், உயர்மட்ட சாலைப்பணிகள், சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. நிலம் கையகப்படுத்த வேண்டிய பணிகள், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம், தனி நபர் பேச்சுவார்த்தை மூலம் நடந்து வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2010ம் ஆண்டு முதல் விரைவாக நடைபெறாத காரணத்தால், பல்வேறு பணிகள் அரைகுறையாக முடிந்த நிலையிலும், பல பணிகள் அரசு அறிவித்து பல ஆண்டுகள் ஆகியும் துவங்கப்படாத நிலையில் உள்ளன.

நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்படும்போது, நிலத்தின் மதிப்பு கூடுவதால், அரசு கூடுதல் தொகை வழங்க வேண்டி உள்ளது. காலதாமதத்தால் திட்டத்திற்கான மதிப்பீடும் பல மடங்கு உயர்கிறது.  பணிகளை குறித்த நேரத்தில் துவங்குவதிலும், முடிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதுதவிர நிலம் கையகப்படுத்துவதற்கான நிதி ஒப்பளிப்பு செய்த பிறகு இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால், அரசுக்கு அதன் தொடர்பான வட்டியாக இதை கருத்தில் கொண்டு, நில எடுப்பு பணிகளை துரிதப்படுத்த  முதல்வர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறைக்கென, 5 மண்டல நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகுகள் மற்றும் 18 தனி வட்டாட்சியர் அலகுகள் தோற்றுவிக்க அனுமதி வழங்கியுள்ளார். மேலும், முன்பே உள்ள 9 நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகுகள் மற்றும் 44 தனி வட்டாட்சியர் அலகுகள் நில எடுப்பு தேவையின் அடிப்படையில், விரிவுபடுத்தி  புதிதாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைத் துறையை பொறுத்தவரையில் ஏறத்தாழ 357 நிலம் கையகப்படுத்தும் பிரேரணைகள் 15(2) அறிவிக்கை வெளியிடப்பட்டு, நிலையில் நிலுவையில் உள்ளன.  அதேபோல, 2009ம் ஆண்டு முதல் 15(1) பிரிவின்கீழ், அறிக்கை வெளியிடப்பட்டு, 203 கருத்துருக்கள் இறுதி தீர்வம் வழங்கப்படாமல் உள்ளது. 2022ம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறையில் 802 ஹெக்டேர் நிலத்திற்கு நில எடுப்பு நடவடிக்கையின் கீழ் இறுதி தீர்வம் பிறப்பிக்கப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு ₹1731.40 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் ேபசினார்.

Related Stories: