நிரந்தர பணி வழங்குங்கள்!: சென்னை அடுத்த காட்டுப்பள்ளியில் கப்பல்கள் உள்ளே, வெளியே செல்லாத வகையில் மீனவர்கள் போராட்டம்..!!

சென்னை: சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் பணி நிரந்தரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கப்பல்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லாதவாறு தடுத்து கடல் மார்க்கமாக மீனவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. கடந்த 2008ம் ஆண்டு வங்கக் கடலோரத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பழவேற்காடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1,750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கப்பட்டது.

இந்நிலையில், அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வேலை வாய்ப்பு, நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கடல் மார்க்கமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் பழவேற்காடு, லைட்ஹவுஸ், தாங்கள் பெரும்பலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். அதானி துறைமுகம் விரிவாக்க திட்டத்தை நிறுத்த வேண்டும். பழவேற்காட்டில் இருந்து காமராஜர் துறைமுகம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதும் மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: