மழையால் கேரளாவும் கைவிட்டது பன்னீர் திராட்சை கிலோ ரூ.10-கம்பம் பகுதி விவசாயிகள் கவலை

கம்பம் : கேரளாவில் மழை பெய்து வரும் நிலையில், கம்பம் பகுதியில் விளைவிக்கப்படும் பன்னீர் திராட்சை கிலோ ரூ.10க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், கே.கே.பட்டி., கே.ஜி.பட்டி, சுருளிப்பட்டி, ஆனைமலையான்பட்டி ஆகிய ஊர்களில் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பன்னீர் திராட்சை பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் விளையும் பன்னீர் திராட்சையை மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும், அண்டை மாநிலமான கர்நாடகம், கேளா ஆகியவற்றிற்கும் அனுப்பி வருகின்றனர். கடந்த மாதம் வரை பன்னீர் திராட்சை நல்ல விலைக்கு விற்பனையானது.

ஆனால், இம்முறை நல்ல மகசூல் கிடைத்துள்ள நிலையில் திடீரென விலை குறைந்துள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.40 முதல் 50 வரை கொள்முதல் செய்தால்தான் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். கேரளாவில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அம்மாநில வியாபாரிகளும் வரவில்லை.  உள்ளூர் வியாபாரிகள் கிலோ ரூ.10க்கு பழம் வெட்டுவதாக தெரிவிக்கின்றனர். தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து, உரம் செலவுகளை கழித்தால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

சுருளிப்பட்டி விவசாயி நல்லதம்பி கூறுகையில், ‘மருத்துவகுணம் நிறைந்த பன்னீர் திராட்சை தற்போது கிலோ ரூ.10க்கு கொள்முதல் செய்கின்றனர். ஒரு குழி நிலம் திராட்சை விவசாயம் செய்ய ரூ.ஒரு லட்சம் வரை செலவாகிறது. ஒரு குழியில் 5 ஆயிரம் கிலோ முதல் 6 ஆயிரம் வரை திராட்சை விளையும். இதில் தொழிலாளிகள் கூலி, மருந்து, உரம் ஆகியவற்றை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே, அரசு திராட்சைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories: