×

தனியுரிமை ரகசியங்களைப் பாதுகாக்கும் ‘தூஸ்ரா’ செயலி

உலகெங்கிலும், பெண்கள் தினமும் தொலைபேசி மூலம் பாலியல் தொல்லைகளாலும், பிற குற்றங்களாலும் பாதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. பெண்கள் பலரும் இரவில் தொந்தரவு தரும் அழைப்புகளுக்குப் பயந்து, மொபைல் போனை அணைத்துவிட்டுத் தூங்குகிறார்கள். மேலும் சிலர், தெரியாத எண்களிலிருந்து அழைப்புகள் வந்தாலே படபடப்புடன் எச்சரிக்கையாகவே அழைப்பை ஏற்கின்றனர் அல்லது அவற்றை தவிர்த்துவிடுகின்றனர். தொலைபேசியில் வரும் தொல்லைகள் தவிர்க்கக் கூடியதாக தெரிந்தாலும், அதனால் பெண்களுக்கு ஏற்படும் மனவுளைச்சல் ஏராளம். இதனால், தொலைபேசி எண்ணை வெளியிடங்களில் தெரிவித்தால் தனியுரிமை பாதிக்கப்படும் என அனைவருமே அச்சப்படுகின்றனர்.

ஆனால், இனி பெண்கள் பொதுவெளியில் தொலைபேசி எண்களைத் தரத் தயங்க வேண்டியது இல்லை. சம்பந்தமே இல்லாமல் வரும் ஸ்பேம் கால்கள், கால்சென்டரிலிருந்து தினமும் கிரெடிட் கார்டு அழைப்புகள் போன்ற  பல பிரச்சனைகளின் தீர்வாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘தூஸ்ரா’ செயலி. தூஸ்ரா என்றால்  இந்தியில் இரண்டாவது எனப் பொருள். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆதித்யா வூச்சி என்பவர் கண்டுபிடித்த இந்த செயலி, சிம் கார்டு இல்லாமலேயே பத்து இலக்க மெய்நிகர் எண்ணை வழங்குகிறது. நம் மொபைல் எண், வங்கிக் கணக்கு முதல் வீட்டு முகவரி, சமூக வலைத்தளங்கள் போன்ற பல விவரங்களுடன் இணைந்துள்ளது. இதனால் நம் அலைபேசி எண், பொதுக் களத்தில் தெரிவிக்கப்படும் போது, அதனுடன் நம் தனியுரிமை விவரங்களும் வெளியாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தூஸ்ரா செயலியின் மெய்நிகர் மொபைல் எண்ணை, ஷாப்பிங் மால்களில், உணவு டெலிவரி செய்யும் இடங்களில் மற்றும் பல ஆன்லைன் வலைத்
தளங்களிலும், செயலிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று ஆன்லைன் கேம் விளையாடக்கூட நம் மொபைல் எண்ணில் லாக்-இன் செய்ய வேண்டி இருக்கிறது. அதன் மூலம் நம்முடைய பல தனிப்பட்ட விவரங்களை திருடி லாபம் பார்க்கின்றனர். இப்படி நம் தனிப்பட்ட தனியுரிமை ரகசியங்களை பாதுகாக்க அனைவருமே தூஸ்ரா செயலியைப் பயன்படுத்தலாம். தூஸ்ரா செயலியை தரவிறக்கம் செய்ததும், ஒரு மெய்நிகர் அலைபேசி எண் வழங்கப்படும். இந்த எண், அனைத்து அழைப்புகளையும் இயல்பாகவே ப்ளாக் செய்துவிடும். ப்ளாக் செய்யப்பட்ட எண்களின் அழைப்புகள் நமக்கு குறுஞ்செய்திகளாக மட்டும் தெரிவிக்கப்படும். தேவையான எண்களை மட்டும் நாம் ‘வைட் லிஸ்ட்’ செய்தால், அந்த எண்களின் அழைப்புகள் மட்டும் தூஸ்ரா எண்ணிலிருந்து, நம் முதன்மையான மொபைல் எண்ணிற்கு மாற்றி அனுப்பப்படும்.

அதே போல, இடம் மற்றும் நேரத்தை மையப்படுத்தியும் அழைப்புகளை ஏற்கும் வசதி இந்த செயலியில் உள்ளது. ஜி.பி.எஸ் மூலம், நாம் இருக்கும் இடத்தின் லோகேஷனை ஆக்டிவேட் செய்ததும், அந்த குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிய 250மீ வரை அனைத்து அழைப்புகளும் முதன்மை எண்ணிற்கு அனுப்பப்படும். அந்த இடத்தைவிட்டு நகர்ந்ததும், அழைப்புகள்  ப்ளாக் செய்யப்பட்டுவிடும். மேலும், ’ஸ்விக்கி, சோமேடோ, ஓலா போன்று மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சேவைகளுடன் இவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த நிறுவனங்களின் மொத்த அலைபேசி எண்களும், இந்த செயலியுடன் இணைந்துள்ளது. நாம் அந்த குறிப்பிட்ட சேவைகளைப் பயன்படுத்தும் போது, உணவு டெலிவரி ஆகும் வரை, அல்லது காரில் பயணிக்கும் வரை மட்டும் அந்த நிறுவனங்களிலிருந்து வரும் அழைப்புகள் தூஸ்ரா செயலி மூலம் நம் முதன்மை எண்ணிற்கு அனுப்பப்படும்.

இது ஆன் - ஆஃப் வசதியுடன் இருப்பதால் பயன்பாட்டு நேரம் தவிர, மற்ற நேரங்களில் இதை ஆஃப் செய்து தேவையில்லாத அழைப்புகளை தவிர்க்க முடியும். அதே சமயம். டெலிவரி நபர்கள் தங்கள் தனிப்பட்ட எண்களிலிருந்து அழைத்தால், அது ஏற்கப்படாது. இதனால் பல பெண்களும் இனி தைரியமாக தூஸ்ரா அலைபேசி எண்ணை இதுபோன்ற பொது இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். தூஸ்ரா எண்ணிலிருந்து நாம் பிறரை அழைக்கும்போது, அது லேண்ட்லைன் எண்ணாகத்தான் அவர்களுக்கு தெரியும். இதனால் தூஸ்ரா செயலி வழங்கிய மொபைல் எண்ணின் ரகசியமும் பாதுகாக்கப்படுகிறது. பிற செயலிகள் போல, அலைபேசியிலிருக்கும் தொடர்பு எண்களின் தகவல்கள், கேலரியில் சேமிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களின் விவரங்கள் போன்ற எந்த தனிப்பட்ட தகவல்களையும் தூஸ்ரா செயலி கேட்பதில்லை.

இந்த செயலியின் நோக்கமே தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பதுதான். எனவே இந்த செயலியை இலவசமாக வழங்கினால், விளம்பரங்கள் மூலம் தகவல்கள் திருடப்படலாம். இதைத் தவிர்க்க தூஸ்ரா செயலியை சந்தா பணம் செலுத்தியே பயன்படுத்த முடியும். மாதம் 59 ரூபாய் என செலுத்தி அதை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிறுவனம் விரைவிலேயே இலவச ‘ட்ரையல் வர்ஷனை’யும் அறிமுகப்படுத்தவுள்ளனர்.

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!