ஹெல்மெட் அணியும் விஷயத்தில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் வேண்டுகோள்

சென்னை: சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வேப்பேரி சிக்னலில் நேற்று மதியம் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி சரட்கர் நேரில் பார்வையிட்டார். பின்னர் மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி சரட்கர் நிருபர்களிடம் கூறியதாவது: இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பிரிவு 129ன் 2007 சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது வாகனங்களில் செல்லும் மக்கள் ஹெல்மெட் அணிந்து வருகிறார்கள். ஆனால், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் இதனை கடைபிடிப்பதில்லை. ஆகையால் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தோம். காலை முதல் மதியம் 2 மணி வரை ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக மொத்தம் 2,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1,250 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னால் அமர்ந்து சென்ற 950 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் காவல்துறையிடம் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: