×

தங்கம் விலை 4 நாளில் சவரனுக்கு ரூ.784 உயர்ந்தது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.784 உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அட்சயதிரிதியை கடந்த 3ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தாண்டு அட்சயதிரிதியை அன்றும், முந்தைய நாள் என 2 நாட்கள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.856 குறைந்தது. இதனால், அட்சயதிரிதியை அன்று நகை விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக இருந்தது. அதைத் தொடர்ந்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.

கடந்த 18ம் தேதி தங்கம் விலை கிராம் ரூ.4,739க்கும், சவரன் ரூ.37,912க்கும் விற்கப்பட்டது. 19ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,755க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,040க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 20ம் தேதியும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,793க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,344க்கும் விற்கப்பட்டது. 21ம் தேதி கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4817க்கும், சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,536க்கும் விற்கப்பட்டது. 22ம் தேதி(நேற்று முன்தினம்) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும்.

அதனால், விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,837க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,696க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.784 அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Tags : Gold prices rise by Rs 784 per ounce in 4 days: Shock to jewelery buyers
× RELATED புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்...