அறநிலையத்துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 1221 கோயில் பணியாளர்கள் பணிவரன்முறை: மண்டல இணை ஆணையர்கள் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 1,221 கோயில் பணியாளர்களை பணிவரன்முறை செய்வதற்கான முன்மொழிவுகள் அடங்கிய விவரங்களுடன் மண்டல இணை ஆணையர்கள் இன்று முதல் 27ம் தேதி வரை நேரில் ஆஜராக ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் இரவு காவலர், அர்ச்சகர், விளக்கு ஏற்றுபவர், மடப்பள்ளிபரிசாரகர், துப்புரவாளர், அலுவலக உதவியாளர், மேலாளர், கணக்கர், காசாளர் என 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோயில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களும் அடக்கம். இந்த பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். இது குறித்து ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:கோயில்களில் தற்காலிகமாக தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் தொடர்ந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களின் பணியை வரன்முறை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண்டல இணை ஆணையர்களால் அனுப்பபட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் 1221 பணியாளர்கள் பணி வரன்முறை செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இணை ஆணையர்களிடம் இருந்து ஏற்கனவே, பரிந்துரைக்கப்பட்ட அனைத்து கோயில்களுக்கும் அறிக்கைகள் அனுப்பப்படாமல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோயில்களுக்கு மட்டுமே முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால், சட்டமன்ற அறிவிப்பினை முழுமையாக செயல்படுத்த இயலாமல் உள்ளது. எனவே கோயில்களுக்கு பணி வரன்முறை செய்வதற்கான முன்மொழிவுடன் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்படுகிறது. அதன்படி சென்னை-1,விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி மண்டல அலுவலகம் சார்பில் இன்றும், கடலூர், மயிலாடுதுறை, சேலம், சிவகங்கை ஆகிய மண்டலம் சார்பில் நாளையும், ஈரோடு, சென்னை-2, தூத்துக்குடி, காஞ்சிபுரம் நாளை மறுநாள், நெல்லை, திருப்பூர், நாகை, வேலூர் மண்டலம் சார்பில் 26ம் தேதியும், தஞ்சை, கோவை, திண்டுக்கல், மதுரை மண்டலம் சார்பில் 27ம் தேதியும் நேரில் ஆஜராக உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: