ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்: மாநகராட்சி முடிவு

சென்னை: மியாவாக்கி காடுகள் மூலம் ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால், சென்னையில் காற்று மாசு பெருமளவில் குறைந்து வருகிறதுஎன்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை பகுதிகளில் மியாவாக்கி நகர்ப்புற காடுகள் காற்று மாசுபாட்டை பெருமளவில் குறைக்கின்றன. அதன்படி சென்னையில் பல இடங்களில் மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறுகிய இடத்தில் 2 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளதால் ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதாக  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை போன்ற மக்கள் எண்ணிக்கை  அதிகமுள்ள மாநகராட்சி பகுதியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில்  மியாவாக்கி நகர்புற காடுகள் வளர்ப்பு முறை, கடந்த 2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை  கொட்டப்பட்டு, பராமரிப்பு இல்லாத இடத்தில் நகர்புற காடு உருவாக்கப்பட்டது. தற்போது அந்த நிலப்பகுதி பல்வேறு மரங்கள், மூலிகைகள் அடங்கிய குறுங்காடாக மாறியுள்ளது.

அதேபோல் வளசரவாக்கத்தில் 20 சென்ட் நிலத்தில் 50 வகைகளில் 800க்கும்  மேற்பட்ட  மரக்கன்றுகளும், மவுலிவாக்கத்தில் 60 சென்ட் நிலத்தில் 2,500க்கும்  மேற்பட்ட மரக்கன்றுகளும் நடப்பட்டன. இப்போது அந்த மரங்கள் காடுகளாக பசுமை  பூத்துக் குலுங்குகின்றன. அத்துடன் புழுதிவாக்கம்,  சோழிங்கநல்லூர்  பகுதிகளிலும், மேலும் 5 இடங்களிலும் மியாவாக்கி முறையில் அடர்ந்த காடுகளாக உருவாகி வருகின்றன. அதே போல திருவான்மியூர், வேளச்சேரி, வியாசர்பாடி, தலைமைச் செயலகம், விருகம்பாக்கம், காந்திநகர் பகுதிகளிலும் இந்த குறுங்காடுகள் மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

மியாவாக்கி முறையில் நடப்படும் மரக்கன்றுகள் வேகமாக வளர்ந்து 2 அல்லது 3 ஆண்டுகளில் குட்டி காடுகளாக மாறிவிடும். அதன்பின்னர் எந்தப் பராமரிப்பும்  தேவைப்படாது. 2 ஆயிரம் மரங்களை வளர்த்தால் ஆண்டுக்கு 11 டன் கார்பன்- டை -  ஆக்சைடை  உட்கொண்டு, 4 டன் ஆக்சிஜனை வழங்கும்.  காற்றின்  ஈரப்பதம் தக்கவைக்கப்படுவதால் மழைப்பொழிவும் அதிகரிக்கும். தவிர, இந்த மரங்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் கிடைப்பதுடன் பூமியின் வெப்பமும் வெகுவாகக் குறையும். ஏராளமான நுண்ணுயிர்கள், பறவைகள், புழு, பூச்சி  பெருக்கமும் அதிகமாகும். மரங்கள்  நெருக்கமாக இருப்பதால் ஒளிச்சேர்க்கைக்காக சூரிய ஒளியைத்தேடி ஒன்றுக்கொன்று வேகமாக போட்டி போட்டு  வளர்கின்றன. அதனால் ஒரு மரத்தின் பத்து வருட  வளர்ச்சி இரண்டு  வருடத்திலேயே கிடைத்துவிடும்.

ஆழமான குழியில் செடியை நடவு  செய்வதால்,  வேகமாக வேர் உள்ளே இறங்கிப் பிடித்துக்கொள்ளும். இந்த மரங்களுக்கு உரமாக  இயற்கைக் கழிவுகள், வீட்டு சமையல் கழிவுகளைப்  பயன்படுத்தினாலே போதும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் இது மாதிரியான திட்டங்கள் பயனளிக்கும். சென்னையில் மேலும், பசுமை பரப்பை அதிகரிக்க 800க்கும் அதிகமான இடங்களை  மாநகராட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் 30% பசுமை பரப்பை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதன் படி கடந்த நான்கு மாதங்களில் 65 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி 1 லட்சம் மரக்கன்றுகள் நடத்தவுள்ளது.  தற்போது சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ்  சென்னை முழுவதும் 1000 மியாவாக்கி காடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.  பொது  இடங்களில் இது போன்ற குறுங்காடுகளை உருவாக்க எண்ணம்  உள்ளவர்கள்  மாநாகராட்சியிடம் தெரிவித்தால் அவர்களுக்கு உடனடியாக  அமைத்துத்தர சென்னை மாநகராட்சி தயராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: