உற்பத்தி செலவிற்கேற்ப விற்பனை துணி விலை உயராததால் விசைத்தறியாளர்கள் வேதனை: திவால் நிலையில் சில உற்பத்தியாளர்கள்

பல்லடம்: உற்பத்தி செலவிற்கேற்ப துணி விற்பனையாகிறது. விலை உயராததால் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் சில உற்பத்தியாளர்கள் திவால் நிலையில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் நாடா இல்லாத விசைத்தறிகள் 50 ஆயிரம் தறிகள் உள்ளன. விசைத்தறி கூடத்தில் 4 தறிக்கு 2 பேர் வீதம் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஒரு தறிக்கு 230 மீட்டர் முதல் 250 மீட்டர் வரை துணி உற்பத்தியாகிறது. 50 ஆயிரம் தறிக்கு தினந்தோறும் சராசரியாக ரூ. 50 கோடி மதிப்புள்ள 1 கோடி மீட்டர் துணி உற்பத்தியாகிறது. ஒரு மீட்டர் துணி உற்பத்தி செய்ய ரூ.45 செலவாகிறது.

அதே சமயம் ஒரு மீட்டர் துணி விற்பனை விலை ரூ.40 ஆக உள்ளது. இதனால் ஒரு மீட்டருக்கு ரூ.5 வீதம் இழப்பு ஏற்படுகிறது. கொரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக பணப்புழக்கம் குறைந்து பொதுமக்களிடம் வாங்கும் சக்தி குறைந்ததால் துணி கொள்முதல் செய்ய வட மாநில ஜவுளி வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் பஞ்சு, நூல் விலை உயர்ந்து தொழில் நலிவடைந்து வருகிறது. அதனால் விசைத்தறி கூடங்களில் ஜவுளி உற்பத்தியை குறைத்த போதிலும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக இயங்கப்பட்ட விசைத்தறி கூடங்களில் ரூபாய் பல கோடி மதிப்புள்ள துணி தேக்கம் அடைந்துள்ளது. உற்பத்தி செலவிற்கேற்ப துணி விற்பனை விலை உயராததால் விசைத்தறியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.   இது பற்றி கரைப்புதூர் நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளரும், மாவட்ட கவுன்சிலருமான கரைப்புதூர் ராஜேந்திரன் கூறியது:

 

திருப்பூர் மாவட்டத்தில் நாடா இல்லா விசைத்தறிகள் 50 ஆயிரம் தறிகள் இயங்கி வருகிறது. கொரோனா பொது முடக்கத்தின் போது வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். பின்னர் தமிழக அரசின் பொது முடக்க தளர்வால் திருப்பூர் மாவட்டத்திற்கு 70 சதம் பேர் மட்டுமே திரும்பினர். 30 சதம் பேர் வரவில்லை. அதனால் விசைத்தறி கூடத்தில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு சிப்ட் சம்பளத்தில் ரூ.50 வரை ஊதியம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் ஊதிய உயர்வு, துணி உற்பத்தி செலவிற்கேற்ப துணி விற்பனை விலை உயரவில்லை.

மேலும் விசைத்தறி உதிரி பாகங்களின் விலை உயர்ந்துள்ளது. முன்பு 20 கவுண்ட் ரக நூல் ஒரு கிலோ ரூ.160 ஆக இருந்தது தற்போது ரூ.240 ஆக கடுமையாக விலை உயர்ந்துள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பொருளாதாரம் பாதிப்படைந்து மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துள்ளதால் வட மாநில ஜவுளி வியாபாரிகள் துணி கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

அதன் காரணமாக துணி உற்பத்தி விலையை காட்டிலும் துணி விற்பனை விலை வீழ்ச்சி அடைந்தது. மேலும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டிய நெருக்கடி, வங்கியில் வாங்கிய கடனுக்கு தவணை மற்றும் வட்டி செலுத்த வேண்டிய கட்டாயம் ஆகியவற்றால் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட  உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை அசல் விலையை விட நஷ்டத்திற்கு விற்க வேண்டிய நிலைக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர்.

நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலை பாதுகாக்க அரசு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்.ஜி.எஸ்.டி. ரிட்டன்களை உடனே வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்கள் தொழில் மேம்பாடு அடைந்துவிடும், வாங்கிய கடனை செலுத்தி விடலாம் என்ற நம்பிக்கையிலேயே கடன் மேல் கடன் வாங்கி கடனில் சிக்கி திணறி வருகின்றனர். சிலர் திவால் ஆகும் நிலையில் உள்ளனர். அவர்கள் வாங்கிய கடன்களுக்கு வட்டி சலுகை வழங்க வேண்டும். மேலும் தொழில் துறை வளர்ச்சி பெற விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும். பஞ்சு, நூல் பதுக்கலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடைதரகர் இன்றி ஜவுளி உற்பத்தியாளர்கள் நேரடியாக துணிகளை விற்பனை செய்ய திருப்பூர், கோவை மாவட்டத்தின் மத்தியில் விசைத்தறிகள் நிறைந்த பகுதியாக இருக்கும் பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு அரசு தங்கும் விடுதி அல்லது வீட்டுவசதியை ஏற்படுத்தி தர வேண்டும். பருத்தி சாகுபடியை பெருக்க  100 நாள் திட்ட தொழிலாளர்களை விவசாய வேலைக்கு பயன்படுத்தி நாட்டில் பஞ்சு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றார்.

Related Stories: