துர்நாற்றம் வீசும் குமரி ஆவின் இடம்மாறும் பால் பதப்படுத்தும் பிரிவு-கலெக்டர், மேயர் ஆய்விற்கு பின் நடவடிக்கை

நாகர்கோவில் :  குமரி ஆவின் பதப்படுத்தும் பிரிவிற்கு மாற்றிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் ஆவினில் தினசரி 20 ஆயிரம் லிட்டர் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது. இந்நிலையில் இங்கிருந்து கிறிஸ்துநகர் வரை துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரை அடுத்து கடந்த 15 நாட்கள் முன்பு மாநகர் நல அலுவலர் விஜய் சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்து பால் பதப்படுத்துதல், பாதம் பவுடர் மற்றும் நெய் போன்ற மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யும், கழிவுநீர் மாநகராட்சி கழிவுநீர் ஓடையில் விடப்படுவதும், பால் கசடுகள் திடக்கழிவாக  தேங்கியதே துர்நாற்றத்திற்கு காரணம் என கண்டறிப்பட்டது. இதனையடுத்து ஆவினுக்கு மாநகராட்சி நகர்நலத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருநாட்கள் முன்பு மேயர் மகேசும்  அங்கு நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்விற்கு பின்னர் கழிவுநீரை அகற்ற மாற்று நடவடிக்கை மேற்கொள்வது பற்றி  கலெக்டரிடமும்  தகவல் தெரிவிக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனக் கூறியிருந்தார். இதன்படி, நேற்று காலை 9.30 மணிக்கு, கலெக்டர் அரவிந்த் மற்றும் மேயர் மகேஷ் ஆவினில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, மாநகர நல அலுவலர் விஜய் சந்திரன், ஆவின் பொதுமேலாளர் சேகர் உடனிருந்தனர்.

 அப்போது தற்காலிகமாக கழிவுநீர் மற்றும் கசடுகளை   யாருக்கும் இடையூரின்றி லாரிகள் மூலம் வெளியேற்றவும், அதன் பின்னர், நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் பால் பதப்படுத்தும் மற்றும் பால் மதிப்பு கூட்டும் பொருட்கள் தயாரிப்பு கூடத்திற்கு மாற்றிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என மேயர் தெரிவித்தார்.

திடீரென துர்நாற்றம் வீச காரணம் என்ன?

குமரி ஆவினில் தினசரி 20 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே பதப்படுத்தப்பட்டதால், அதிக பட்சம் 10 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் மற்றும் கசடுகள் வெளியேறியது. இவை முறையாக சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்பட்டது. ஆனால், தற்போது தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்திற்கும் சேர்த்து பதப்படுத்தப்படுகிறது. இதனால், தினசரி வெளியேறும் கழிவு 20 முதல் 28 ஆயிரம் லிட்டர் வரை உயர்ந்துள்ளது. ஆனால், ஆவினில் 10 ஆயிரம் லிட்டர் கழிவுகளை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றவே வசதி உள்ளது. தற்போது, உற்பத்தி இரு மடங்காக அதிகரித்துள்ளதால், தற்போது உள்ள சுத்திகரிப்பு நிலையம் போதுமானதாக இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது.

தோவாளை அருகே இடம் தேர்வு?

ஆவினில் பால் கழிவுகளை சுத்திகரித்து வரும் நீரை, வைத்து பூங்கா அமைப்பதுடன், விவசாயம், கழிவறைகளை சுத்தம் செய்வது போன்றவற்றுக்கு  பயன்படுத்தலாம். இதற்கு நாகர்கோவிலில் இடமின்மையால், தோவானை 4 வழிச்சாலை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆவின் பதப்படுத்தும் பிரிவு புதியதாக சுத்திகரிப்பு வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.

Related Stories: