மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அடிப்படை வசதிகள்: பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள, உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலைமான்திருமுடி காரி ஆய்வு செய்தார். மாமல்லபுரத்தில் வரும் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கவுள்ளது. இதையாட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடி பார்வையில் குழு அமைத்து, தனி அலுவலர்களை நியமித்து, பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், போட்டி நடக்கும் இடத்தில் தினமும் அமைச்சர்கள், தனி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாமல்லபுரத்தில் உள்ள சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்பட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்ளனர். அதுபோல் வருபவர்களுக்கு, அடிப்படை தேவையான குடிநீர், கழிப்பறை, சாலை உள்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவது குறித்து பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலைமான்திருமுடி காரி, ஆரோவில் பகுதியில் உள்ள குளியலறை, கழிப்பறை சீரமைப்பு, மின் கம்பங்கள், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், அனைத்து பணிகளும் போட்டி தொடங்குவதற்கு முன்பே செய்து முடிக்க வேண்டும். தினமும், சுழற்சி முறையில் மாமல்லபுரத்தில் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் சேராமல் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது, பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, பொறியாளர் சிவக்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் இருந்தனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண வெளிநாடுகளில் இருந்து வருபவர் நேரடியாக கண்டுகளிக்க முடியாது. டிவி சேனல்கள் மூலமாக பார்க்க முடியும். மாமல்லபுரத்தில் பழைய செல்போன் டவர்களில், வேகம் சற்று குறைவாக உள்ளது. இதனால் செல்போனில் ஆன்லைன் மூலம் நேரடியாக போட்டியை பார்க்கும் வகையில் தற்காலிகமாக, 10க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல்கட்டமாக மாமல்லபுரம் அடுத்த தேவனேரியில் இசிஆர் சாலையொட்டி தனியார் கம்பெனி மூலம் தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த செல்போன் டவரால் வெளிநாட்டினர் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் போட்டியை நேரடியாக தங்களது செல்போனில் கணா முடியும் கூறப்படுகிறது.

Related Stories: