சேலத்தில் ஒரு கல்யாண ராணி சிக்கினார்; 3 பேருடன் திருமணத்தை மறைத்து வாலிபரை 4வதாக மணந்த இளம்பெண்;தாலி கட்டியவுடன் குட்டு அம்பலம்: உறவினர்களாக நடித்தவர்கள் ஓட்டம்

சேலம்: சேலத்தில் 3 திருமணங்களை மறைத்து பட்டதாரி வாலிபரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண், மாமியாரின் சந்தேகத்தால் சிக்கினார். சேலம் இரும்பாலையை சேர்ந்தவர் அஜித்குமார் (35, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரியான இவர் நீண்ட நாட்களாக மணமகள் தேடி கிடைக்கவில்லை. இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு புரோக்கர் ஒருவர் அஜித்குமாரின் பெற்றோரை அணுகினார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ரம்யா (27, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று நமது இனத்தை சேர்ந்த அழகான பெண் உள்ளார், பெற்றோர் இல்லை. சித்தி, அத்தை, மாமாவுடன் உள்ளார். அவர்களிடம் பேசி திருமணம் செய்துவிடலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதை ஏற்று அஜித்குமாரும் பெற்றோருடன் சூளகிரிக்குச் சென்றார். அங்கு பெண்ணை பார்த்ததும் அவருக்கு பிடித்துப்போனது. ரம்யாவுக்கு அஜித்குமாரின் குடும்பத்தினர் நகைகளை வாங்கிக் கொடுத்தனர். அப்போது ₹1 லட்சத்து 25 ஆயிரத்தை கமிஷனாக தந்து விட வேண்டும் என்று  புரோக்கர் தெரிவித்துள்ளார். பெண் கண்ணுக்கு லட்சணமாக இருந்ததால் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அஜித்குமாருக்கும் ரம்யாவுக்கும் திருமணம் நடந்தது. பெண் வீட்டாரிடம் திருமணத்தை பதிவு செய்வதற்காக பெண்ணின் ஆதார் அட்டையை மாமியார் கேட்டார். அதற்கு ரம்யா எடுத்து வரவில்லை என கூறியுள்ளார். இது அஜித்குமாரின் தாய்க்கு சந்தேகப்பொறியை ஏற்படுத்தியது. தற்செயலாக மணப்பெண் கைபையை எடுத்த அஜித்குமாரின் தாய், அதில் இருந்த ஆதார் கார்டை பார்த்தபோது அதில் மணப்பெண் பெயர் மற்றும் அவரது கணவர் பெயர் கோவிந்தராஜ் என இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளானார். ஐய்யய்யோ நாம் ஏமாந்து போயிட்டோமே என்று அலறினார். இதனால், கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அஜித்குமாரின் உறவினர்கள் ஆதார் கார்டை வாங்கிப் பார்த்தனர்.

 

தாலி கட்டிய சிறிது நேரத்திலேயே புரோக்கர் மற்றும் பெண்ணின் சித்தி, மாமா, அத்தை ஆகியோர் கமிஷன் பணத்தை வாங்கிக்கொண்டு தப்பியதும் மணப்பெண் மட்டும் சிக்கியதும் தெரிந்தது.

கிடுக்கிப்பிடி விசாரணையில் ‘‘எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. புரோக்கர் கூறியதால்தான் மணப்பெண்ணாக நடித்தேன், நான் உண்மையாகவே உங்களின் சாதியை சேர்ந்தவள்தான், என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று ரம்யா தெரிவித்தார். மேலும், உங்கள் மகனின் வாழ்க்கையில் எந்த விதத்திலும் இனி குறுக்கிடமாட்டேன் என்று  50 ரூபாய் பத்திரத்தில் எழுதியும் கொடுதுள்ளார்.

இருப்பினும் ரம்யாவை அழைத்துக் கொண்டு இரும்பாலை காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். திருமணம் நடந்த இடம் திருச்செங்கோடு, பெண்ணின் வீடு சூளகிரி, நாங்கள் எப்படி விசாரிப்பது என  போலீசார் கேட்டனர். மேலும், நீங்களே நல்ல முடிவை எடுத்துக்கொள்ளுங்கள். முதலிரவை சந்தித்து இருந்தால் உங்களிடம் இருக்கும் அனைத்து பொருட்களும் காணாமல் போயிருக்கும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என நினைத்துக்கொள்ளுங்கள் என போலீசார் தெரிவித்தனர்.

 

இதையடுத்து ரம்யாவுடன் சூளகிரிக்குச் சென்றனர். அங்கு ரம்யாவின் வீட்டில் இருந்தவர்கள், ‘‘எங்களுக்கு யாரையும் தெரியாது’’ என்று கூறியுள்ளனர். இதனால் ரம்யாவை அஜித்குமாரின் குடும்பத்தினர் அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டனர். பின்னர் மீண்டும் இரும்பாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஏமாற்றிய புரோக்கர், சித்தி, மாமா, அத்தை ஆகியோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருமணத்திற்காக மணமகன் தரப்பினர் சுமார் ₹5 லட்சம் வரை செலவு செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘நீண்ட நாட்களாக திருமணம் நடக்காதவர்களை குறி வைத்து மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது. அந்த பெண் 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

Related Stories: