மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மனைகளில் குடியிருப்பவர்கள் மற்றும் வணிகம் ெசய்பவர்கள் வாடகை செலுத்தாதவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மனைகளில் குடியிருப்பவர்கள் மற்றும் வணிகம் ெசய்பவர்கள் வாடகை செலுத்த தவறினால், அவர்களுக்கு பலமுறை அறிவிப்புகள் அனுப்பப்பட்டு நியாய வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நியாய வாடகை செலுத்தாதவர்களிடம் அறிவிப்புகள் அனுப்பப்பட்டும், நியாய வாடகை செலுத்தாதவர்களின் வாடகை உரிமம் ரத்து செய்யப்பட்டு வெளியேற்றிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மயிலாப்பூர் ராமகிருஷ்ண மட சாலையில் 1120 சதுரடி கட்டிடத்தில்  வாடகையில் இருந்த கண்ணம்மாள், 1105 சதுர அடி கட்டிடத்தில் வாடகையில் இருந்த தாயாரம்மாள், 1135 சதுர அடி கட்டிடத்தில் வாடகையில் இருந்த ஜலாலுதீன், 1995 சதுர அடி கட்டிடத்தில் வாடகையில் இருந்த பாலச்சந்திரராஜ், சென்னை அண்ணா சாலையில் உள்ள 1500 சதுர அடி கட்டிடத்தில் வாடகையில் இருந்த கலாவதி, அண்ணா சாலை முதலி தெருவில் 1576 கட்டிடத்தில் வாடகையில் இருந்த எம்.கிருஷ்ணன் ஆகிய 6 பேருக்கு நியாய வாடகையை செலுத்த பலமுறை அறிவிப்புகள் அனுப்பப்பட்டும், அறிவிப்புகளை பெற்றுக் கொண்ட கட்டிட வாடகைதாரர்கள் நியாய வாடகை மற்றும் நிலுவை வாடகை தொகைகளை செலுத்த முன்வரவில்லை.

எனவே பல்வேறு நினைவூட்டுகளுக்கு பின்னரும், நியாய வாடகை நிர்ணய குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்ட நியாய வாடகை நிலுவைத் தொகையை செலுத்த தவறிய வாடகைதாரர்களின் வாடகை உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் 6 கட்டிடங்களில் உள்ள வாடகைதாரர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றி இணை ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையின் மீது உரிய நீதிமன்ற விசாரணை நடத்திய இணை ஆணையர் சட்டப்படி வெளியேற்றிட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவுகளின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தாவா சொத்துகளில் இருந்து 4 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்றி சீலிடப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. மேலும் நேற்றுமுன்தினம் 2 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்றி சீலிடப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்ட இந்த சொத்துகளின் மதிப்பு ரூ.3 கோடியே 70 லட்சம்.  இந்நிகழ்வின் போது, இணை ஆணையர் காவேரி உள்பட கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: