மருத்துவ பயன்பாட்டுக்கு மாநகராட்சி நிலம் : சென்னை மேயர் பிரியா தகவல்

தாம்பரம்: தாம்பரம் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தில் மருத்துவ பயன்பாட்டுக்கு மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர மேயர் பிரியா தெரிவித்தார். தாம்பரம் அருகே மாடம்பாக்கம் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தின் சில பகுதிகளில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை நேற்று காலை சென்னை மாநகர மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப்சிங் பேடி, தாம்பரம் மாநகர ஆணையர் இளங்கோவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி நிலத்தில் செய்ய வேண்டிய திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் மாநகர மேயர் பிரியா ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் மேயர் பிரியா கூறுகையில், தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் கடந்த 1946ம் ஆண்டு தனது 30 ஏக்கர் நிலத்தை அழகப்ப செட்டியார் என்பவர் சென்னை மாநகராட்சிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்த நிலத்தை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம். இந்நிலத்தில் அப்போது தொழுநோய் மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. தற்போது அங்கு தொழுநோய் மருத்துவமனை பயன்பாட்டில் இல்லை. எனவே, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை தொழுநோய் மருத்துவ பயன்பாட்டுக்கு மேம்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சருடன் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர மேயர் பிரியா தெரிவித்தார்.

Related Stories: