மாணவி மீதான காதல் மோகத்தால்; கூடுவாஞ்சேரி அருகே அரசு பள்ளி மாணவர்கள் கோஷ்டி மோதல்: சாலையில் சரமாரி அடிதடி: வீடியோ வைரலால் பரபரப்பு

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மாணவி மீது ஏற்பட்ட காதல் மோகத்தால் நேற்று மாலை மாணவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து பள்ளி நுழைவு வாயில்முன்பு சாலையில் அடிதடி மோதலில் ஈடுபட்டனர். ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் 1,600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு பள்ளி மாணவி மீதான காதல் மோகத்தால் நேற்று மாலை மாணவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து, நுழைவுவாயிலின் முன்பு சரமாரி அடிதடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறுகையில், இப்பள்ளியில் மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டத்தை கூட்டி, இப்பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து கொள்ளும் விதத்தை அவரவர் பெற்றோர்களிடம் எடுத்து கூறவேண்டும். ஆனால், இங்கு பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டத்தை கூட்டுவது கிடையாது.

இதனால் பெரும்பாலான மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து திருத்துவதற்கு உடற்கல்வி ஆசிரியரும் நியமிக்கப்படவில்லை. மேலும், இப்பகுதியில் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் இங்கு இதுபோன்ற பல்வேறு அடிதடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன என வேதனை தெரிவித்தனர்.

Related Stories: