ராஜிவ் கொலை வழக்கும், நடந்த நிகழ்வும்

ராஜிவ் காந்தி கொலைவழக்கு தொடர்பாக கடந்த 1991 ஜூன் 11ம் தேதி நளினியின் தாயார் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான முதல் கைது இதுதான். இதை தொடர்ந்து கடந்த 1991 ஜூன் 14ம் தேதி நளினி, முருகன் ஆகிய இருவரும் சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் கைதுசெய்யப்பட்டனர். இதற்கடுத்ததாக, பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். கடந்த 1991 ஜூன் 18ம் தேதி ராபர்ட் பயஸ் கைதுசெய்யப்பட்டார். கடந்த 1991 ஜூன் 19ம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, கடந்த 1991 ஜூன் 26ம் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். கடந்த 1991 ஜூலை 2ம் தேதி சென்னையின் பிரபல புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரம் கைது,  கடந்த 1991 ஜூலை 17ம் தேதி கோடியக்கரை ஜமீன்தார் சண்முகம் கைதுசெய்யப்பட்டார். ஜூலை 20ம் தேதி ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் அவர் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த 1991 ஜூலை 27ம் தேதி புலிகள் அமைப்பைச் சேர்ந்த விக்கி, ரகு ஆகிய இருவரும் கோயம்புத்தூரில் பிடிபட்டனர். இதற்கு அடுத்த நாள் டிக்ஸன், குணா என்ற இருவர் சயனைடு அருந்தி உயிரிழந்தனர்.

கடந்த 1991 ஆகஸ்ட் 17ம் தேதி  கர்நாடகத்தின் முதாடி, பிரூடா பகுதிகளில் தங்கியிருந்த புலிகள் இயக்கத்தினரை காவல்துறை சுற்றி வளைத்ததும் 17 பேர் சயனைடு அருந்தினர். 12 பேர் இறந்துவிட, ஐந்து பேர் காப்பாற்றப்பட்டனர். கடந்த 1991 ஆகஸ்ட் 19ம் தேதி பெங்களூரின் புறநகர்ப் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அம்மன், ஓட்டுனர் ஒருவர் உள்ளிட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். காவல்துறை சுற்றிவளைத்ததால், அவர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கினர்.

1992 ஜனவரி 31ம் தேதி பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகிய மவரும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகிறார்கள். கடந்த 1992 மே 20ம் தேதி 55 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. 41 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 3 பேர் தலைமறைவாக இருந்தவர்கள். தற்கொலை செய்துகொண்டவர்கள் 12 பேர். சிறையில் இருந்தவர்கள் 26 பேர். கடந்த 1993 மே 5ம் தேதி அரசு தரப்பின் தலைமை வழக்கறிஞர் பி. ராஜமாணிக்கம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சித்திக் முன்பாக தனது வாதத்தைத் துவங்கினார்.

கடந்த 1994 டிசம்பரில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மானை கைதுசெய்ய வேண்டுமென இன்டர்போல் மூலம் சிபிஐ ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது .கடந்த 1995 ஜூனில் பிரபாகரன் உள்ளிட்ட மூன்று பேரை கைதுசெய்து இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமென முறைப்படி இலங்கையிடம் கோரியது இந்தியா. கடந்த 1998 ஜனவரி 28ம் தேதி ராஜிவ் காந்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டிக்கப்பட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

1998 செப்டம்பர் முதல் 1999 ஜனவரி வரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. கே.டி. தாமஸ், டி.பி. வாத்வா, சையத் ஷா முகமது கத்ரி ஆகியோர் விசாரித்தனர். மே 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தடா சட்டப்படி குற்றம்சாட்டப்பட்ட சண்முக வடிவேலு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். மற்ற 18 பேரும் குற்றம் சாட்டப்பட்டதைவிட தீவிரம் குறைந்த குற்றங்களையே புரிந்ததாக நீதிமன்றம் கூறியது. அவர்கள் அதுவரை சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாகக் கருதி விடுதலை செய்யப்பட்டனர்.

* பேரறிவாளனுக்காக உயிர் நீத்த செங்கொடி

பேரறிவாளன் உட்பட 3  பேரின்  கருணை மனு குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, 3 பேர் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டன. இந்த நிலையில் கடந்த 2011 ஆகஸ்ட் 28ம் தேதி காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே செங்கோடி தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்து கொண்டனார். துடிதுடித்து இறக்கும் கடைசி நொடி வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள், அவர்களை விடுதலை செய் என்று முழக்கமிட்டப்படி உயிரிழந்தார். அப்போது அவர் எழுதிய கடிதத்தில், தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்புக்கையுடன் செல்கிறேன் என்று அநத் கடிதத்தில் கூறியிருந்தார்.

Related Stories: