கோவை வஉசி மைதானத்தில் நாளை ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

கோவை: கோவை வஉசி மைதானத்தில் நாளை ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சி நடக்கிறது. இதை, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு, பீளமேடு விமான நிலையத்தில், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். நாளை (வியாழன்) காலை 9.30 மணிக்கு கோவை வஉசி மைதானத்தில் நடைபெறும் ‘‘பொருநை’’ அகழ்வாராய்ச்சி கண்காட்சியை துவக்கிவைத்து பார்வையிடுகிறார். மேலும், அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சியையும் திறந்து வைக்கிறார்.

இதன்பின்னர், காலை 11 மணிக்கு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடுகிறார். குறிப்பாக, பஞ்சாலைகளில் நிலவும் தேக்கநிலை மற்றும் அதனை சீரமைப்பது எப்படி? என்பது குறித்து விவாதிக்கிறார். மாலையில், கார் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டி சென்று அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை மறுதினம் (வெள்ளி) ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். அன்றிரவும் ஊட்டியிலேயே தங்குகிறார். 21ம் தேதி (சனிக்கிழமை) ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர், கோவை வந்து, பீளமேடு விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார். முதல்வரின் வருகையையொட்டி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: