ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் பணத்தை இழக்க வேண்டாம்: காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் பணத்தை இழக்க வேண்டாம் என்று காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார். சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகர காவல் துறை காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. இந்த பல்பொருள் அங்காடி சுய சேவை பிரிவு தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், காவலர் நலன் கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ், சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் சாமுண்டிஸ்வரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது: காவலர்கள் நலனுக்காக தமிழகம் முதல்வர் உத்தரவுப்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய அங்காடி காவலர் குடும்பத்துக்கு பயன் உள்ளதாக இருக்கும். பள்ளி படிப்பு முடித்த காவலர்களின் வாரிசுகளுக்கு தனியார் நிறுவனங்களில் அவர்கள் படிப்புக்கு ஏற்றப்படி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறோம். காவலர்கள் தங்களது பணி காலத்தில் பலர் மன அழுத்தத்துடனேயே பணியாற்றி வருகின்றனர். இதனால் ஆண்டுக்கு 250 பேர் முதல் 300 பேர் வரை உயிரிழக்கிறார்கள். தற்போது காவலர்கள் சிலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடி விளையாட்டுகளில் காவலர்கள் யாரும் ஈடுபட்டு பணத்தை இழக்க வேண்டாம்.

காவல் பணி ஆபத்தான பணியாகும். பணி நேரத்தில் தாக்குதல் சம்பவங்களும் நடைபெறுகின்றன. முதல்வர் உத்தரவின் பேரில் தற்போது காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காவலர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூ.10 கோடி செலவில் புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தில் பணியின்போது நடந்து கொள்வது எப்படி என்பது பற்றியும் மனம் மகிழ்வுடன் இருக்கும் வகையிலும் தமிழகம் முழுவதும் உள்ள 1.13 லட்சம் காவலர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘வலையின் மூலம் தலையை தேடும் பணி’

சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட காவலர் பல்பொருள் அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களிடம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:

ராயபுரத்தில் முன்னாள் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆறு உடல் பாகங்கள், ரத்த மாதிரிகள், எலும்பு மஜ்ஜைகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட தலையை மீனவர்களின் உதவியுடன் வலை மூலம் தேடும் பணி நடந்து வருகிறது. சென்னையில் மாணவர்கள் மூன்று இடங்களில் மோதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் இரட்டை  கொலை வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் விஞ்ஞான ரீதியான கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது. இதற்காக குற்றவாளிகள் கொலை செய்து விட்டு தப்பி சென்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரித்து குற்றப்பத்திரிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை ெபற்றுதரப்படும்.  சென்னையில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் விரைவில் வரவேற்பாளர் நியமிக்கப்பட்டு பொதுமக்களிடம் புகார்கள் பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: