திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை எம்பி பதவி ப.சிதம்பரத்துக்கு ஒதுக்க வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை எம்பி பதவி ப.சிதம்பரத்துக்கு ஒதுக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக மாணவர் காங்கிரஸ் பிரிவுக்கு சத்தியமூர்த்தி பவனில் முதல் தளத்தில் அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதன் தலைவர் சின்னதம்பி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மாணவர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டிலும், அலுவலகத்திலும் சி.பி.ஐ. சோதனையிடுவது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கிய ஒரு மாநிலங்களவை எம்பி பதவியை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை இன்னும் 2 நாட்களில் முடிவு செய்யும். நான் எம்பி சீட் கேட்டு கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் கோரிக்கை வைக்கலாம்.

மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக நான் யாருக்கும் இன்னும் கோரிக்கை வைக்கவில்லை. மீண்டும் ப.சிதம்பரத்திற்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில்,  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராஜேஷ் குமார், அசன் மவுலான  எம்எல்ஏ, மாநில துணைத் தலைவர் கோபண்ணா, மாநிலச் செயலாளர் சிரஞ்சீவி, ஓபிசி  பிரிவின் மாநில தலைவர் நவீன்குமார், மகிளா காங்கிரஸ் தலைவி சுதா  ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ரஞ்சன் குமார் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: